நேபாள நாட்டில் 22 பயணிகளை ஏற்றி சென்ற சிறிய விமானம் மாயமானது. டாரா ஏர் 9 NAET என்ற இந்த விமானம் போக்ரா பகுதியில் இருந்து ஜோம்சோம் என்ற இடத்திற்கு பயணித்தது. இன்று காலை 9.55 மணி அளவில் கிளம்பிய விமானம் சிறிது நேரத்திலேயே தரைப் பகுதியுடன் தொடர்பை இழந்தது.
இந்த விமானத்தில் நேபாள நாட்டு மக்களுடன், நான்கு இந்தியர்களும் 3 ஜப்பானியர்களும் பயணித்துள்ளனர். விமான ஊழியர் குழு உள்பட மொத்தம் 22 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். விமானத்தை தேடும் பணியை நேபாள அரசு உடனடியாக தீவிரப்படுத்தியுள்ளது .விமானத்தை தேடும் பணியில் இரண்டு தனியார் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பதிந்திரா மணி போக்ரேல் தெரிவித்துள்ளார். அத்துடன் நேபாளத்தின் ராணுவ ஹெலிகாப்டரும் இந்த தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
விமானம் பயணித்த பகுதியின் உள்ளூர் காவல்துறை தகவலின் படி, டிட்டி மலைப் பகுதியில் இந்த விமானம் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்பகுதி மக்கள் அங்கு விசித்திரமான சத்தம் கேட்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு காவல்துறை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். முஸ்தாங் மாவட்டத்தில் உள்ள இந்த டிட்டி என்ற பகுதியில் புகழ்பெற்ற முக்திநாத் ஆலயம் உள்ளது.
இதையும் படிங்க:
சீனாவில் கடும் வெள்ள பாதிப்பு - 15 பேர் பலி, அவசர நிலை பிறப்பித்து அரசு உத்தரவு
இங்குள்ள பகுதிகள் பெரும்பாலும் மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளதால், விமான விபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. மேலும் மலைப் பகுதியில் வானிலை மாற்றம் திடீரென நிகழ்வது இயல்பு என்பதால் இங்கு பயணம் செய்யும் விமான ஓட்டிகளுக்கு சவால் அதிகம் காணப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் இந்த டாரா மலைப் பகுதியில் பயணிக்கும் போது விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 23 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சீனா மற்றும் குவைத் நாட்டை சேர்ந்த ஒருவரும் சிக்கி மரணமடைந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.