செவ்வாய் கிரகத்திலிருந்து தனது முதல் புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியது நாசாவின் பெர்சிவரன்ஸ் விண்கலம்

நாசாவின் ஜெட் புரபல்சன் ஆய்வக தலைமையகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவாதி விண்கலத்தை இயக்குகிறார்

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்து குழுவின் தலைவர் டாக்டர். சுவாதி மோகன் அவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் இந்தியாவிற்கும் உலகிற்கும் பெருமைமிகு தருணம் இது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  நாசாவின் பெர்சிவரன்ஸ் என்ற ஆய்வூர்தி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி, தனது முதல் புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது.

  செவ்வாய் கிரகத்தின் கடந்த காலத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அட்லஸ் என்ற விண்கலத்தை கடந்தாண்டு ஜூலை மாதம் 30ம் தேதி விண்ணில் செலுத்தியது. அதில், ஒரு டன் எடையில் இரண்டு மீட்டர் நீளம் கொண்ட இரண்டு எந்திர கரங்களுடன், 19 கேமராக்களும் பொருத்தப்பட்ட, பெர்சவரன்ஸ் என்ற ஆய்வூர்தி இடம்பெற்றிருந்தது.

  7 மாதங்களில் சுமார் 292 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணித்த அந்த விண்கலத்தை, நாசாவின் ஜெட் புரபல்சன் ஆய்வக தலைமையகத்தில் இருந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவாதி மோகன் எனும் விஞ்ஞானி தலைமையிலான குழு கட்டுப்படுத்தியது.

  திட்டமிட்டபடி இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலையில், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசோரா பள்ளத்தாக்கில் ரோவார் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் கைகளை தட்டியும், கூச்சலிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  நாசாவின் பெர்சிவரன்ஸ் அனுப்பிய புகைப்படம் ( IMAGE-NASA)


  ரோவர் ஊர்தி தரையை தொட்டதும் கறுப்பு, வெள்ளை நிறத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அந்த படத்தில் ரோவரின் நிழலும் பதிவாகியுள்ளது.

  அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ரோவர்,  செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு நீர் ஆதாரங்கள், உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல், முந்தைய காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என ஆய்வு செய்ய உள்ளது. தொடர்ந்து, பரிசோதனை மாதிரிகளுடன், அந்த ஆய்வூர்தி 2030ம் ஆண்டு பூமிக்கு திரும்பும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

  இதனிடையே, இந்த ரோவரில் உள்ள இன்ஜெனூட்டி எனப்படும் அதிநவீன குட்டி ஹெலிகாப்டர் கொண்டும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் 2030ம் ஆண்டு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... Petrol-Diesel Price | உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

  இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,”நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்து குழுவின் தலைவர் டாக்டர். சுவாதி மோகன் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தியாவிற்கும் உலகிற்கும் பெருமைமிகு தருணம். நாசா ஜே.பி.எல் மற்றும் அதன் அறிவியலாளர்கள் அறிவியலின் புதிய எல்லைகளைக் கடந்து, நமது அறிவின் பரப்பை விரிவாக்கம் செய்வதை கண்டு வியப்புக் கொள்கிறேன்”  என்று பதிவிட்டுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: