ஹோம் /நியூஸ் /உலகம் /

விண்ணிலும் முளைக்குமா விதைகள் - நிலா மண்ணில் செடி வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை

விண்ணிலும் முளைக்குமா விதைகள் - நிலா மண்ணில் செடி வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை

நில மண்ணில் செடி வளர்ப்பு

நில மண்ணில் செடி வளர்ப்பு

நாசாவும், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து நடத்திய ஆய்வில் பல ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நிலாவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் செடிகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். நிலாவைக் காட்டி, குழந்தைகளுக்கு சோறு ஊட்டாத தாய்மார்கள் தமிழ்நாட்டில் இல்லை. எங்கு சென்றாலும், நிலா கூடவே வருகிறது என்று குதூகலிக்காத குழந்தைகளும் இல்லை. அதேபோல், நிலாவை காதலியாக நினைத்து, கவிதைகள் எழுதாத கவிஞர்களும் இங்கு இல்லை.

கற்பனையில் நிலவை அளந்த கவிஞர்களை தாண்டி, முதன்முதலில் நிலவில் காலடித் தடம் பதித்தவர்கள் அமெரிக்கர்கள். பல கட்ட முயற்சிக்குப் பிறகு 1969 ஜூலை 16ஆம் தேதி நிலவை நோக்கி பறந்தது நாசாவின் அப்போலோ 11 விண்கலம். 4 நாட்கள் பயணத்திற்கு பின், ஜூலை 20ஆம் தேதி நிலவின் அருகே நிறுத்தப்பட்டது அப்போலோ 11 விண்கலம். அந்த விண்கலத்தில் சென்ற எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோருக்கு கட்டளை அதிகாரியாக இருந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். அப்போலோ விண்கலத்தை இயக்கிய மைக்கேல் காலின்ஸ் அதிலேயே இருக்குமாறு உத்தரவிட்டது நாசா.

அவரை அப்போலோ விண்கலத்திலேயே விட்டுவிட்டு, பருந்து என்ற துணைக்கலம் மூலம் பத்திரமாக நிலவின் மேல் இறங்கினார்கள் நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும்.அவர்கள் திரும்பி வரும் வரை, அப்போலோ விண்கலத்தை இயக்கிக் கொண்டிருப்பதுதான் காலின்ஸ்-க்கு வழங்கப்பட்ட வேலை.

நிலவின் நிலப்பரப்பு பாலைவனம் போன்று காட்சி அளித்தாலும், பதற்றம் அடையவில்லை அவர்கள் இருவரும். நாசாவின் அடுத்த உத்தரவு வரும் வரை, 6 மணி நேரம் பருந்து கலத்திலேயே பயணித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அடுத்தநாள், 1969 ஜூலை 21ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தூசு போன்ற மணல் பரப்பில், மனித இனம் சார்பில் முதன்முதலில் நிலவில் கால் பதித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். அதை, அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் உள்பட உலகம் முழுவதும் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தது 60 கோடி பேர்.

ஆம்ஸ்ட்ராங்கை பின் தொடர்ந்து, அடுத்ததாக நிலவின் நிலப்பரப்பில் கால் வைத்தார் ஆல்ட்ரின். ஆனந்தத்தில் துள்ளிக் குதித்த அவர்கள் இருவரும், அங்கே நட்டது அமெரிக்க தேசியக் கொடியை. அதன்பிறகு பல்வேறு ஆய்வுக் கருவிகளையும் பொருத்திய அவர்கள், ஆங்காங்கே சிதறிக் கிடந்த சிறு கற்களையும், மண்ணையும் சேகரித்துக் கொண்டனர்.

இவ்வாறு இரண்டரை மணி நேரம் நிலவின் நிலப்பரப்பில், நேரத்தை செலவிட்டனர். இருவரும் புதிய சாதனை படைக்கப்பட்டதை, பூமியில் இருந்தவாறு பூரிப்புடன் பார்த்து ரசித்தது நாசா. அடுத்த சில நிமிடங்களில் பூமிக்கு திரும்ப அவர்களுக்கு உத்தரவு பறந்தது. அடுத்த 4 நாட்கள் பயணம் செய்து, இந்த விண்கலம் பத்திரமாக இறங்கிய இடம் பசிபிக் பெருங்கடல். இவ்வாறு எடுத்து வரப்பட்ட மண்ணில்தான், செடிகளை வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் இன்றைய நாசா விஞ்ஞானிகள்.

நாசாவும், அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து நடத்திய ஆய்வில் வெளியாகியுள்ளது பல ஆச்சரியங்கள். ஆம், ஒரு செடிக்கு ஒரு கிராம் அளவு நிலாவின் மண்ணை பயன்படுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

சந்திர மண்ணில் சத்துகள் குறைவு என்பதை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், கவனமுடன் செயல்பட்டதற்கு கிடைத்துள்ளது பலன். ஆரம்பரத்தில் விதைகள் வெடித்து வெளிவந்தாலும், வேர்களின் வளர்ச்சியில் இருந்துள்ளது தடை. இதை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள், இன்னும் சில மாதங்களில் இதை செய்து விடுவோம் என்கின்றனர். இப்போது வளரும் செடிகள் வலுவாக இல்லாவிட்டாலும், எதிர்கால ஆய்வுகளுக்கு இது வலு சேர்க்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதையும் படிங்க: பேய் திருமணம் : 3000 ஆண்டுகளாக சீனாவில் நடக்கும் வினோதமான வழக்கம்! 

வருங்கால விண்வெளி வீரர்கள் நிலவு மற்றும் செவ்வாயில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டால், அங்கேயே தேவையான உணவை உற்பத்தி செய்ய இந்த ஆய்வு முடிவுகள் உதவும் என்றும்,பூமியில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இது அடிப்படையாக அமையும் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

First published:

Tags: NASA, Science