செவ்வாய் கோளில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள், நீர் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய, பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி கடந்தாண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. நாசாவின் அட்லஸ் விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட அந்த ஆய்வூர்தி, ஏழு மாத பயணத்திற்குப் பிறகு கடந்த 18ம் தேதி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை அடைந்தது. அப்போது, பாராசூட் மூலம் ஆய்வூர்தியின் வேகம் குறைக்கப்பட்டு தரையிறக்கப்பட்டது. இந்த காட்சிகள், ஆய்வூர்தியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து, அதில் பொருத்தப்பட்டுள்ள 19 பிரத்யேக கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட பலவிதமான புகைப்படங்கள் புவிக்கு அனுப்பட்டு வருகின்றன. அதில் செவ்வாயின் நில அமைப்பு, அங்குள்ள பாறைகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. ஆய்வூர்தி தரையிறங்கிய வேகத்தில் குறிப்பிட்ட பரப்பில் புழுதி பறந்து பதிவான காட்சிகளில், அங்குள்ள பாறைகளின் அமைப்பு தெளிவாக பதிவாகியுள்ளது
இதனிடையே, செவ்வாய் கிரகத்தில் காற்றோட்டத்தின் காரணமாக ஏற்படும் ஒலியை, ஆய்வூர்தியில் உள்ள இரண்டு மைக்ரோபோன்கள் பதிவு செய்துள்ளன. செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்வது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
மேலும் படிக்க... பள்ளி மாணவர்களுக்குள் மோதல்: கண்மூடித்தனமாகத் தாக்கும் பரபரப்பு வீடியோ
தொடர்ந்து, அடுத்த 2 ஆண்டுகளுக்கு பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி செவ்வாயின் மேற்பரப்பில் தனது ஆய்வுப் பணிகளை தொடர உள்ளது. அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், 2030ம் ஆண்டு மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்