நாசாவின் நிதியுதவி பெற்ற விஞ்ஞானிகள் குழு, முதன்முறையாக நிலாவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் தாவரங்களை வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.
நிலாவில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர். இதற்காக விண்வெளிக்கு வீரர்கள், ரோவர்களை அனுப்பி பல கட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பல்லோ விண்கலம் மூலமாக ரெகோலித் என்றும் அழைக்கப்படும் நிலவு மண் பூமிக்கு கொண்டு வரப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதன்முறையாக, ஆராய்ச்சியாளர்கள் கடினமான மற்றும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட அரபிடோப்சிஸ் தலியானா என்ற தாவரத்தை வளர்த்துள்ளனர்.
புளோரிடா பல்கலைக்கழகத்தில் நாசாவின் நிதியுதவியுடன் கூடிய விஞ்ஞானிகள் குழுவால் இந்த பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறுகையில், "நாசாவின் நீண்ட கால மனித ஆராய்ச்சிகளிலேயே இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உள்ள வளங்களை நாம் பயன்படுத்தி எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு உணவு ஆதாரங்களை உருவாக்க முடியும். விவசாய கண்டுபிடிப்புகளைத் உருவாக்க நாசா எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு ஆகும். இது பூமியில் உணவுப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தாவரங்கள் எவ்வாறு மன அழுத்தத்தை சமாளிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.
புளோரிடா பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை அறிவியல் துறையின் பேராசிரியரான ராபர்ட் ஃபெர்ல் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் "50 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்பல்லோ ஆய்வகங்களில் மீண்டும் தொடங்கப்பட்ட சோதனைகளை நாங்கள் முடித்திருக்கிறோம். முதலில் தாவரங்கள் ரெகோலித்தில் வளர முடியுமா என்ற கேள்வியை கேட்டு கொண்டோம். இரண்டாவதாக, மனிதர்கள் நிலவில் நீண்ட காலம் தங்குவதற்கு அது எப்படி உதவும். இதற்கான முதல் விடையை இப்போது கண்டறிந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ALSO READ | 3,000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான தொங்கும் பாலம் திறப்பு
ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு கிராம் ரெகோலித் மண் மட்டுமே ஒதுக்கப்பட்டது. தண்ணீர் மற்றும் விதைகளை ரெகோலித் மண் மாதிரிகளில் சேர்த்து பின்னர் அவற்றை ஒரு சுத்தமான அறையில் டெர்ரேரியம் பெட்டிகளில் வைக்கப்பட்டது. தினமும் ஒரு ஊட்டச்சத்து ஆதாரம் சேர்க்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவை முளைக்க ஆரம்பித்தன. எல்லாம் முளைத்தது. நாங்கள் எவ்வளவு ஆச்சரியப்பட்டோம் என்று என்னால் சொல்ல முடியாது! ஒவ்வொரு தாவரமும் சந்திர மாதிரியில் இருந்தாலும் சரி அல்லது கட்டுப்பாட்டில் இருந்தாலும் சரி, ஆறாவது நாள் வரை ஒரே மாதிரியாகவே காணப்பட்டது என தோட்டக்கலை அறிவியல் பேராசிரியரான அன்னா-லிசா பால் கூறியுள்ளார்.
நிலாவில் உள்ள மண்ணில் தாவரங்களை வளர்ப்பதன் மூலம், விஞ்ஞானிகள் முதல் கேள்விக்கு பதிலளித்துள்ளனர், ஆம், ரெகோலித்தில் தாவரங்களை வளர்க்க முடியும். பூமியின் மண்ணில் வளரும் தாவரங்களைப் போல தாவரங்கள் வலுவாகவோ அல்லது ஊட்டச்சத்து நிறைந்ததாகவோ இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த சாதனை வெவ்வேறு கிரகங்களில் தாவரங்களை வளர்ப்பதற்கான உண்மையான சாத்தியக்கூறுகளுக்கு வழி வகுத்துள்ளது என விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.