மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தால் நேற்று நள்ளிரவு 1 மணி முதல் மீண்டும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
பிப்.1 தேதி முதல் ஆட்சியை கைப்பற்றிய மியான்மர் ராணுவம் சுமார் ஒரு வராத்திற்கு இணைய சேவையை நாடு தழுவிய அளவில் முடக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் இணைய சேவையை முடக்கியது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை எனக் கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது. இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1ம் தேதி ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.
நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது. ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக பொதுக்கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் மியான்மரில் தடை விதிக்கப்பட்டது.
அதனை மீறி பொதுக் கூட்டம் கூட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், சில முக்கிய நகரங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதனை தடுக்க நேற்று நள்ளிரவு மியான்மரின் பல நகரங்களில், ஆயுதமேந்திய போர் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. மியான்மரின் வடக்குப் பகுதியில் இருக்கும் கச்சின் என்கிற மாகாணத்தில், ஒன்பதாவது நாளாக நடந்து வந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹேலிங் ஒரு புதிய தொலைத்தொடர்பு சட்டத்தை இயற்றியதாக, அரசு நடத்தும் எம்ஆர்டிவி கூறிய சிறிது நேரத்திலேயே இணைய சேவை முடங்கியது. நேற்று நள்ளிரவு ஒரு மணி முதல் இன்று காலை வரை நாடு முழுவதும் முழுமையாக இணைய சேவை முடங்கியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடுவதை தடுக்க தொலைபேசி மற்றும் இணைய அணுகலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தகவல்தொடர்புகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் எதிர்ப்பாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் தங்களுக்கு புதிய அதிகாரங்களை வழங்கியுள்ளதாக எம்ஆர்டிவி தகவல் அளித்துள்ளது.