ஆரோக்கியமான குழந்தைக்கு 8 ஆண்டுகள் சிகிச்சை.. தாயின் தவறான புரிதலால், மிகைப்படுத்தலால் ஏற்பட்ட கொடுமை..

ஆரோக்கியமான குழந்தைக்கு 8 ஆண்டுகள் சிகிச்சை.. தாயின் தவறான புரிதலால், மிகைப்படுத்தலால் ஏற்பட்ட கொடுமை..

இங்கிலாந்து

இங்கிலாந்தில் ஆரோக்கியமான குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் இருப்பதாக கூறி 8 ஆண்டுகளாக வீல்சேரில் அமர்த்தி தாய் ஒருவர் சிகிச்சை அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
இங்கிலாந்தில் 12 வயதான சிறுமி ஒருவர் எந்த பாதிப்பும் இல்லாமல் 8 ஆண்டுகளாக வீல்சேரில் அமர்ந்தவாறு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். இந்த கொடுமையான செயல், அந்த சிறுமியின் தாயின் தவறான புரிதலால் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. அதில், 2012-ஆம் ஆண்டு குழந்தைக்கு வலிப்பு இருப்பதாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தாய், மருத்துவர்களிடம் நோயின் உண்மையான அறிகுறிகளை கூறாமல் அதனை மிகைப்படுத்திக் கூறியுள்ளார்.

இதனால் 2013-ஆம் ஆண்டு முதல் அந்தக் குழந்தை வீல் சேரில் அமர்த்தப்பட்டு வலிப்பு மற்றும் பக்கவாதம் நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் குழந்தையின் அறிகுறிகளை தொடர்ந்து மிகைப்படுத்தி மிகைப்படுத்தி மருத்துவர்களிடம் கூறி பல்வேறு வகையான மருந்து மாத்திரைகளை எடுக்க வைத்துள்ளார். இதனால் குழந்தை தேவையில்லாமல் பல்வேறு வகையான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளையும் அந்த தாய் அடிக்கடி மாற்றியுள்ளார்.

அதிகப்படியான மாத்திரைகளை எடுத்துக்கொண்ட குழந்தை வீல்சேரிலேயே பள்ளிக்கும் சென்றுள்ளது. 2017-ஆம் ஆண்டு இந்த நிலை மிகவும் மோசமாகி, செயற்கை உணவுக்குழாய் பொருத்தி அதன் மூலம் குழந்தைக்கு உணவளிக்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு மேலும் கூடுதலான மருந்து, மாத்திரைகள் குழந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர், 2019-ஆம் ஆண்டு அந்த குழந்தையை தத்தெடுத்த சமூகசேவகர்கள் குழந்தை நலமாக இருப்பதை உணர்ந்தனர். சிறுமி எந்தவித பாதிப்பும் இல்லாமல் தேவையற்ற சிகிச்சைகளை எடுத்து வந்ததையும் அவர்கள் கண்டுபிடித்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

தாயின் அரவணைப்பில் இல்லாமல், உறவினர்களுடன் இருக்கும்போது குழந்தை நலமாக இருப்பதை உணர்ந்த அவர்கள், சிறுமியின் தாய்க்கு ஏற்பட்ட தவறான புரிதலே இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என கூறியுள்ளனர். இறுதியாக குழந்தை நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக தீர்ப்பளித்துள்ள லண்டன் உயர்நீதிமன்ற நீதிபதி, தாயின் குழப்பங்கள் காரணமாக 12 வயது குழந்தை தேவையில்லாமல் 8 ஆண்டுகள் வீல் சேரில் அமர்ந்தவாறு பல்வேறு சிகிச்சைகளை பெற்றிருப்பதாக கூறியுள்ளார்.

இது மிகவும் கொடுமையான விஷயம் எனவும் நீதிபதி கூறியுள்ளார். மேலும், சிறுமியுடன், தாய் சேர்ந்து வாழ்வதற்கு 2-வது முறையாக வாய்ப்பளிக்க வேண்டுமானால், முதலில் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை அவர் உணரவேண்டும் என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் 8 ஆண்டுகள் பல்வேறு வகையான, கொடுமையான சிகிச்சைகளை 12 வயது சிறுமி பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published: