தற்கொலை என்பது மிகவும் ஆபத்தான செயல். மோசமான மனக் குழப்பத்தில் எடுக்கும் முடிவு. பெரும்பாலான தற்கொலைகள் அற்பக் காரணங்களுக்காகவே நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் சில தற்கொலைகளுக்கான காரணங்கள் மிக விநோதமாகவும், நம்பவே முடியாததாகவும் இருக்கும்.
இப்படி தற்கொலைகள் எப்போதுமே மர்மம் நிறைந்தவையாகவே இருக்கின்றன. தற்கொலை கடிதம், உடற்கூறாய்வு அறிக்கை இவையெல்லாம் தற்கொலைக்கான அனுமானமான காரணங்களை மட்டுமே கூற முடியும். உண்மையான காரணம் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கே தெரியும். இதனால் பெரும்பாலும் தற்கொலை வழக்குகளை முடிக்கவும் முடியாமல், இழுக்கவும் முடியாமல் காவல்துறையினர் திண்டாடுவார்கள். அப்படிதான் ஒரு தற்கொலை வழக்கை கையில் வைத்துக் கொண்டு திண்டாடி வருகிறார்கள் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண காவல்துறை.
அமெரிக்காவின் முக்கியமான மாகாணங்களுள் ஒன்று பென்சில்வேனியா. அந்த மாகாணத்தின் தெற்கு பகுதியில் யார்க் நகரில் உள்ள வெஸ்ட் மான்செஸ்டர் நகர காவல்நிலையத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி அதிகாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் தங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டில் இரவு நேரம் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. உடனடியாக அங்கு விரைந்து சென்று காவல்துறையினர் பார்த்த போது, ஒரு வீட்டிற்குள் தாய், தந்தை மற்றும் இளம்பெண்ணான மகள் என மூன்று பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.
சடலங்களை கைப்பற்றி விசாரணையை துவக்கியது காவல்துறை. அப்போது மூன்று வகையான தற்கொலை கடிதங்கள் அங்கு கிடைத்துள்ளன. அந்த கடிதங்களில் இருக்கும் விபரங்கள் உண்மையா என்பது ஆய்வு செய்து விசாரணை நடத்திய பிறகு தற்போது அந்த கடிதங்களில் இருக்கும் விபரங்களை வெளியிட்டிருக்கிறது காவல்துறை. 69 வயதான ஜேம்ஸ் டாப், 62 வயதான டெபோரா டாப் மற்றும் 26 வயதான மோர்கன் டாப் என்பவர்கள் தான் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்கிற விபரங்களும் வெளியாகியுள்ளன. அந்த தற்கொலை கடிதங்களில் இருக்கும் விபரங்கள் மிகவும் விபரீதமானவை. அந்தக் கடிதங்கள் ஜனவரி 10 ஆம் தேதியே எழுதப்பட்டுள்ளன.
டெபோரா எழுதியுள்ள கடிதத்தில் இந்த தற்கொலை முடிவை மூன்று பேரும் சேர்ந்தே எடுத்ததாக குறிப்பட்டுள்ளார். ஜேம்ஸ் எழுதியுள்ள கடிதத்தில் என் கை மிகவும் நடுங்கியதால் என்னை என் மனைவி துப்பாக்கியால் சுட்டார் என்றும் இதே போல் டெபோரராவின் கடிதத்தில் அவரை அவர்களுடைய மகள் மோர்கன் சுட்டதாகவும் எழுதியிருக்கிறார்கள். எனவே தாயையும் தந்தையையும் சுட்டுக் கொன்றுவிட்டு மோர்கன் தற்கொலை செய்து கொண்டிருந்திருக்கிறார் என்கிறது காவல்துறை.
இதெல்லாம் பரவாயில்லை, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, மோர்கன் பற்றி கிடைத்த தகவல்கள் தான் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு யூடியூபில் மோர்கன் பதிவேற்றம் செய்திருந்த வீடியோ ஒன்று போலீசாரின் பார்வையில் சிக்கியது. அதில் தன்னை இங்கிலாந்து ராணியாகவும், கடவுளின் அருளால் தான் ஒரு தீர்க்கதரிசியாக மாறியதாகவும், அதனால் முழு அதிகாரத்துடன் தான் இங்கிலாந்து நாட்டின் ராணியாக முடி சூடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்து குழம்பிப் போயிருக்கிறார்கள் காவல்துறையினர்
ஆனால் டாப் குடும்பத்தை பற்றி அருகில் இருப்பவர்கள் மிக நல்ல விதமாகத் தான் சொல்லியிருக்கிறார்கள். மோர்கனும் மிக ஸ்மார்ட்டான பெண் என்றும் சொல்லியிருக்கிறார்கள். என்ன நடந்திருக்கும்? அடுத்து என்ன செய்வது என குழம்பிப் போயிருக்கிறது பென்சில்வேனியா காவல்துறை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Mysterious death, Police investigation, Suicide