ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய பிராந்தியத்தில் அமைதிக்கு குந்தகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரமும் பெரும் தாக்கத்தைச் சந்தித்துள்ளது. எண்ணெய் பொருள்களின் விலை உயர்வை கண்டுள்ள நிலையில், அத்தியாவசிய உணவு பொருள்களின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நலிவடைந்த நாடுகளின் உணவு பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாக ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் குழந்தைகளில் எதிர்கொண்டுள்ள பாதிப்பு குறித்து உக்ரைன் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து சுமார் நான்கு மாதங்கள் ஆகும் நிலையில், இந்த போர் காரணமாக உக்ரைனில் இதுவரை 287 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா தனது போரை தொடங்கிய நிலையில், இந்த போரில் டோன்ஸ்க் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் 192 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிவ் பகுதியில் 116 குழந்தைகளும், கார்கீவ் பகுதியில் 132 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போரில் நாடு முழுவதும் 754க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறியுள்ள உக்ரைன் அரசு, இதுவரை 1,848 கல்வி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் புள்ளி விவரப்படி, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதிக்குப் பின் மொத்தம் 4,302 பொது மக்கள் போரில் உயிரிழந்துள்ளனர். 5,217 பேர் காயமடைந்துள்ள நிலையில், சுமார் 72 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் சுமார் 48 லட்சம் மக்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதையும் படிங்க:
வடகொரியாவில் இருந்து காத்து வாக்கில் பரவுமா கொரோனா.. ஜன்னலை மூடி வைக்க சொன்ன சீனா!
போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு விதத்தில் அழுத்தம் தந்து வருகின்றன. அந்நாட்டின் மீது தொடர் பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்து வருகிறது. அதேபோல் உக்ரைனுக்கு உதவும் விதமாக ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை நேட்டோ நாடுகள் வழங்கி வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.