பிரதமர் மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!

பிரதமர் மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!
நரேந்திர மோடி (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: September 21, 2019, 11:48 AM IST
  • Share this:
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடியின் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டு, பின்னர் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

அமெரிக்காவுக்கு அரசுமுறைப்பயணமாக பிரதமர் மோடி நேற்றிரவு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், அவர் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இடையில், விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டது.


2 மணி நேர தாமதத்திற்கு பின்னர் விமானம் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரை நோக்கி புறப்பட்டது.

இன்று மாலை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் நகருக்கு பிரதமர் மோடி சென்றடைகிறார். 22-ம் தேதி டெக்சாஸில் நடைபெறும் ஹவுதி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் உரை ஆற்றுகிறார். சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்து கொள்ள உள்ளார். அமெரிக்க வரலாற்றில் வாஷிங்டன் டிசி-யை தவிர்த்து இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி ஹூஸ்டனில் நடைபெற உள்ளது.

23-ம் தேதி, ஐக்கிய நாடுகள் அவையில், பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 24-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் பிரதமர் ஈடுபட உள்ளார். ஒரு மாதத்திற்குள் 2வது முறையாக மோடி - ட்ரம்ப் சந்திப்பு நடைபெறுகிறது.பின்னர் இந்தியாவின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் தென்கொரியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, பங்களாதேஷ், ஜமைக்கா நாடுகளின் தலைவர்களும், ஐநா பொதுச்செயலாளரும் பங்கேற்கின்றனர். ஐக்கிய நாடுகள் அவையில் இந்திய ஆளுமை ஒருவர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. ஐநா சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவை கட்டடத்தின் மேற்கூரையில் சூரியஒளி மின் தகடுகள் அமைக்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் சார்பில் சுமார் 7 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தொடர்ந்து பில்கேட்ஸ் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் சர்வதேச சாதனையாளர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. ஸ்வட்ச் பாரத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக பிரதமருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 25-ம் தேதி உலக தொழில் மாநாட்டில் பிரதமர் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து பிரதமர் தலைமையில் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக 45 அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது.

26-ம் தேதி சுமார் 20 நாடுகளின் தலைவர்களை பிரதமர் சந்தித்து இந்தியா உடனான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளார். இதையடுத்து 27ஆம் தேதி ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடியை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் உரை நிகழ்த்த உள்ளதால் இருநாட்டு தலைவர்கள் பேசப்போகும் கருத்துகள் குறித்து சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

7 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு 27ஆம் தேதி இந்தியா திரும்புகிறார். பிரதமரின் இந்த பயணத்தின் போது சுமார் 28 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு அமெரிக்க முதலீடுகள் ஈர்க்கப்படும் என வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்