இந்தியாவில் உருமாற்றம் பெற்ற கொரோனாவிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள்

மாதிரிப் படம்

இந்தியாவில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களின் தாக்குதலில் இருந்து ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், பி.1.617 என்ற இரட்டை உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் வைரஸ் பெருந்தொற்று பரவல் வேகம் எடுப்பதற்கு இந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த வைரஸ் பரவல் சிங்கப்பூர், பிரான்ஸ் உட்பட 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் பயண கட்டுப்பாடு விதித்தன.

  இந்நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களின் தாக்குதலில் இருந்து ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் பாதுகாப்பு அளிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்பவர்களுக்கு இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 அல்லது B.1.618 என்ற மரபணு மாற்ற கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஆய்வக திசு வளர்ச்சி ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி இரண்டு தவணை போட்டுக் கொண்டவர்களின் ரத்த மாதிரியுடன் இந்த உருமாறிய கொரோனா வைரஸ்களை வைத்து ஆய்வு செய்ததாகவும், இதில், வழக்கமான வைரஸுடன் ஒப்பிடும்போது, B.1.617 என்ற உருமாறிய வைரஸை எதிர்கொள்வதில் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் நான்கு மடங்கு குறைவதை கண்டறிந்துள்ளனர். மேலும், B.1.618 வைரஸை எதிர்கொள்வதில் மூன்று மடங்கு குறைவதும் தெரியவந்துள்ளது. நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தபோதிலும் மாடர்னா, பைசர் தடுப்பூசிகளால் பயன் இல்லை என்று கூறிவிட முடியாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், உருமாறிய கொரோனா வைரஸில் இருந்து இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பளிப்பது உறுதியாவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: