ஹோம் /நியூஸ் /உலகம் /

அதிகரிக்கும் தொற்றால் உயிரிழப்பு, லாக்டவுன்... சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

அதிகரிக்கும் தொற்றால் உயிரிழப்பு, லாக்டவுன்... சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

கொரோனா

கொரோனா

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சீனாவின் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது கொரோனா வைரஸ். கிட்டத்தட்ட உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பரவி லட்சக் கணக்கான உயிர்களை பலிகொண்டது கொரோனா வைரஸ். 2020ஆம் ஆண்டில் உச்சத்தில் இருந்த கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து தற்போது 95 விழுக்காடு குறைந்துள்ளது. கொரோனா பெருந்தாற்றால் பொருளதார ரீதியாக பெரிய பின்னடைவை சந்தித்த உலக நாடுகள் இப்போது மெல்ல இந்த சரிவில் இருந்து மீண்டு வருகின்றன. ஆனால், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கத்  தொடங்கியுள்ளது.

  கடந்த மே மாதம் முதல் சீனாவில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி ஒரு நாளின் கொரோனா பரவல் எண்ணிக்கை சீனாவில் 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சீனா தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளது. ஏற்கனவே சில நகரங்களில் ஊரடங்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று கொரோனா வைரசால் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். மே மாதத்திற்குப் பிறகு தற்போது சீனாவில் கொரோனா பலி பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா உயிர் பலி மீண்டும் ஏற்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

  இந்நிலையில் குவாங்சோ மாகாணத்தில் உள்ள பையூன் மாவட்டத்தில் இன்று முதல் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும், நோய் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக சுகாதரத்துறையை அனுக வேண்டும் எனவும் பையூன் நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வெளியில் இருந்து நகருக்குள் வருபவர்கள் மூன்று நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : ட்விட்டரில் புளூ டிக் சேவை குறித்த அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்

  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பொதுமக்களுக்கு முழுமையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா இல்லா சீனா என்கிற கொள்கை மேலும் தீவிரமாக்கப்படும் எனவும் சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

  கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிவிட்டது என உலக நாடுகள் நிம்மதியடைந்து வரும் நேரம், சீனாவில் மீண்டும் நோய் தொற்று பரவல் அதிகரிப்பதும், உயிர் பலி ஏற்படுவதும், சீனாவை மட்டுமல்ல, உலக நாடுகளையும் பீதியடைய வைத்துள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: China, Corona, CoronaVirus