முகப்பு /செய்தி /உலகம் / இனவெறியால் கல்லூரி வகுப்பறையில் ஆல்கஹால் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவன் - கொடூரத்தின் உச்சம்

இனவெறியால் கல்லூரி வகுப்பறையில் ஆல்கஹால் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவன் - கொடூரத்தின் உச்சம்

மாதிரி படம்

மாதிரி படம்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாத்தியமான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மெக்சிகோவை சேர்ந்த ஒரு 14 வயது பள்ளி மாணவன் தனது வகுப்பறையிலேயே தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்டுள்ளான். இன பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வர போராடும் ஒரு நாட்டில், அந்த மாணவன் செய்த "ஒரே குற்றம்" என்ன தெரியுமா, அவனது பழங்குடியின மொழியில் பேசியதுதான்.

மெக்சிகோவின் மத்திய மாகாணமான குரேடாரோவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், படிக்கும் ஜுவான் ஜமோரானோ என்ற மாணவரின் இருக்கையில் சக மாணவர்கள் இரண்டு பேர் மதுவை ஊற்றியதாக குற்றம் சாட்டப்படுகிறது. 14 வயது சிறுவனான ஜமோரானோ தனது கால்சட்டை ஈரமாக இருப்பதை உணர்ந்து எழுந்து நின்றபோது, அதில் ஒரு மாணவன் ஜமோரானோவை தீ வைத்து எரித்ததாக மாணவனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாணவன், அண்மையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஓட்டோமி பழங்குடியினத்தை சேர்ந்த ஜமோரானோ, தன் இனம் காரணமாக கடந்த பல வாரங்களாகவே பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளான், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குடும்ப வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள்தொகையுடன், லத்தீன் அமெரிக்க நாட்டில் வசிக்கும் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடி குழுக்களில் ஓட்டோமியும் ஒன்றாகும். ஓட்டோமி மொழி ஜுவானின் தாய் மொழி "ஆனால் அவர் அதை அதிகம் பேச விரும்பவில்லை, ஏனெனில் அது தன்னை கேலிக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் என பயந்ததே காரணமாகும்" என்கிறார் மாணவரின் குடும்ப வழக்கறிஞர்களில் ஒருவரான எர்னெஸ்டோ பிராங்கோ.

ஜுவானின் பூர்வீகம் காரணமாக அவரது ஆசிரியர் கூட அவரை துன்புறுத்தியதாக குடும்பத்தினர் ஊடகங்கள் வாயிலாக குற்றம் சாட்டியுள்ளனர்.ஜமோரானோவின் தந்தை, "எல் யுனிவர்சல்" என்ற செய்தித்தாளில் இந்த தாக்குதல் சம்பவத்தை ஒரு "கொலை முயற்சி" என்றே குறிப்பிடுகிறார்.

குரேடாரோ மாகாண வழக்கறிஞர்கள் தாக்குதல் குறித்து விசாரணையை தொடங்கி உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாத்தியமான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

”ஜூவானின், செய்த ஒரே குற்றம் ஒடோமி மொழியில் பேசியது மட்டுமே" என லோபஸ் ஒப்ரடோரின் செய்தித் தொடர்பாளர் ஜீசஸ் ராமிரெஸ் ட்வீட் செய்துள்ளார், இனவெறியை ஒழிப்பது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிகோவின் தேசிய பழங்குடியின மக்கள் நிறுவனம், "சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஈடுபடும் சிறார்கள் மற்றும் பெரியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதிகாரிகளை வலியுறுத்தியது.

மேலும் இனப் பாகுபாடு மற்றும் இனவெறி நிகழ்வுகளை தடுக்க பள்ளிகளில் அவசர நடவடிக்கைகள் தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 126 மில்லியன் மக்கள் வசிக்கும் மெக்சிகோவில், 23.2 மில்லியன் மக்கள் பழங்குடியினராகவும் 7.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பழங்குடி மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர்.

Also Read : பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம்.. தாய்லாந்து அரசு முடிவு

கடந்த மார்ச் மாதம், ஓட்டோமி இனப் பழங்குடி பெண் ஒருவர் மெக்சிகோ சிட்டியில் உள்ள விடுதி ஒன்றின் கழிவறையை பயன்படுத்த தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் அனுமதி என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்படி என்றால் “நான்யார்” என்ற பெரும் கேள்வியுடனும் மன உளைச்சலுடனும் வீடு திரும்பி உள்ளார் அந்தப் பெண். இது போன்ற இனப்பாகுபாட்டின் தொடர்ச்சியாகவே தற்போது ஓட்டோமி பழங்குடியினத்தை சேர்ந்த 14 வயது மாணவர் மீது தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

அமைப்பு ரீதியான இனவாதம்

2018 ஆம் ஆண்டு தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட கணக்கெடுப்பின்படி, சுமார் 40 சதவீத பழங்குடியின மக்கள் இன ரீதியான பாகுபாடுகளை எதிர்கொண்டதாக புகார் கூறியுள்ளனர்.

இதில் ஏறக்குறைய பாதி பேர் தங்கள் உரிமைகள் பெயரளவிற்குக் கூட மதிக்கப்படுவதாக, தாங்கள் உணரவில்லை என தெரிவித்துள்ளனர். பழங்குடியின மக்களுக்கு எதிரான சில மோசமான எண்ணங்களையும் இந்த கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது. கேள்விக்குட்படுத்தப்பட்ட 10 பேரில் மூன்று பேர் "பழங்குடியினரின் வறுமை அவர்களின் கலாச்சாரத்தால் ஏற்படுகிறது" என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருந்தனர்.

ஜமோரானோ போன்ற வழக்குகள் எங்கோ யாருக்கோ நடக்கும் நிகழ்வுகள் அல்ல, அவை அமைப்பு ரீதியான இனவெறியின் ஒரு பகுதி என சர்வதேச தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாமின்(Oxfam), மெக்சிகோ தலைவரான அலெக்ஸாண்ட்ரா ஹாஸ் கூறினார்.

2019 ஆம் ஆண்டில், மெக்சிகோவில் ஆக்ஸ்பாம்(Oxfam) நடத்திய ஆய்வில், பழங்குடி மொழியைப் பேசுவது, பழங்குடியினராக இருப்பது, கருப்பர்கள் அல்லது கலப்பு இனத்தைச் சேர்ந்தவர்களுடனான அடையாளம், கருமையான நிறத்தைக் கொண்டிருப்பது ஆகிய அம்சங்கள் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைக் குறைப்பது தெரிய வந்துள்ளது.

மெக்சிகோ அரசு இனப் பாகுபாட்டைத் தடுக்கும் நோக்கத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. மேலும் புகார்களைக் கையாள்வதற்கான பொறுப்பான நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது.

அப்படியிருந்தும், ஜமோரானோவின் வழக்கு, "இனப் பாகுபாடு எவ்வளவு தூரம் வரை செல்லும்" என்பதற்கு ஒரு அப்பட்டமான எடுத்துக்காட்டு என, பாகுபாட்டைத் தடுப்பதற்கான தேசிய கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஹாஸ் கூறுகிறார். " பல நூற்றாண்டுகளாகவே இந்த இன, மொழி பாகுபாடுகள் உள்ளன," என்றும் அவர் கூறினார்.

First published:

Tags: Mexico, Viral