• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • 1 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள "Mercedes Benz"-ல் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது நேர்ந்த விபரீதம்: வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

1 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள "Mercedes Benz"-ல் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது நேர்ந்த விபரீதம்: வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆபத்தான முறையில் மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டி வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 • Share this:
  சுமார் 1,00,000 டாலர்கள் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்சில் (Mercedes Benz) ஃபர்ன்அவுட் (Burnout) செய்ய முயன்ற போது திடீரென தீ பிடித்ததில் கார் முழுவதும் நாசமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஆஸ்திரியா நாட்டில் உள்ள சிட்னியின் செஸ்டர் ஹில் என்ற பகுதியில் உள்ள ஒரு புறநகர் தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில், ஒரு நபர் தனது மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி சி 63 எஸ்ஸை (Mercedes Benz AMG C63S) ஒரு கூட்டத்தின் முன்னால் காட்சிப்படுத்த முயன்ற போது, ஆடம்பர வாகனம் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கார் எப்படி தீ பிடித்தது என்பதும் அந்த வீடியோ பதிவில் வெளியாகியுள்ளது.

  25 வயதான ஓட்டுநர் தனது ஸ்டண்ட் காரின் பின் டயர்களில் இருந்து புகையை வெளிப்படுத்த பார்வையாளர்கள் முன்னிலையில் ஃபர்ன்அவுட் செஷனை செய்ய முயன்றுள்ளார். சில நிமிடங்களிலேயே பின் டயரில் இருந்து புகை வந்தது. ஆனால் அதன்கூடவே கார் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், காரில் இருந்த 3 நபர்களையும் வெளியேறுமாறு அங்கு கூடியிருந்தவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  "காரை விட்டு வெளியேறுங்கள்" என்று ஒருவர் பயணிகளை நோக்கி கத்துவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

  மேலும் காரின் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் விலகிச் சென்றனர். அதிர்ஷ்டவசமாக 3 நபர்களும் காரில் இருந்து வெளியேறி எந்த காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளனர். மேலும், காரின் உரிமையாளர் எந்த அளவு வேகத்தை பயன்படுத்தினார் என்பதும்  கேமராவில் சிக்கியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. காரில் பிடித்த தீயை அணைக்க அருகில் இருக்கும் தண்ணீர் குழாயை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், விலை உயர்ந்த ஸ்டண்ட் கார் தீ பிடித்ததில் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் சாலையும் சேதமடைந்தது.

  அந்த சமயத்தில் நெருக்கடியைக் கையாள தீ மற்றும் மீட்பு என்.எஸ்.டபிள்யூ (Fire and Rescue NSW) குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னர் வாகனத்தின் உரிமையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாங்க்ஸ்டவுன் போலீஸ் ஏரியா கமாண்டின் (Bankstown Police Area Command) போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் குறித்து முதலில் தெரிவித்தவர்கள், சொகுசு வாகனம் சாலையில் ஓடும்போது தீப்பிடித்ததாக கூறியுள்ளனர். இருப்பினும், சம்பவம் தொடர்பான வீடியோ கிளிப் இணையத்தில் வைரலாகி வந்ததால், உரிமையாளர் ஒரு ஸ்டண்ட் செய்ததன் மூலமாகவே வாகனம் தீப்பிடித்தது என்பது தெரிய வந்துள்ளது.

  இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆபத்தான முறையில் மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டி வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுமார் ஒன்றரை நிமிட நீளமான கிளிப் 2,700க்கும் மேற்பட்ட ரியாக்ஷன்களையும் 5,000 கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது. சிலர் இந்த வீடியோவிற்கு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தாலும், பலர் இதனை கேலி செய்து கமெண்ட் அடித்துள்ளனர். பின்னர் செய்தி அறிக்கைகளில் வெளியான தகவலின்படி, காரை ஓட்டியவர் கடந்த ஆண்டு இந்த கருப்பு கூப்பை (Mercedes Benz AMG C63S) வென்றார் என்றும், சம்பவம் நடந்த அன்று அவர் அதை விற்பனைக்கு வைத்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

  அதன் செயல்திறனை ஸ்டண்ட் மூலம் காண்பிக்க நினைத்தபோது விளையாட்டு விபரீதத்தில் முடிந்துள்ளது. இதனால் கார் நாசமாய் போனது மட்டுமல்லாமல் தேவையில்லாத நடவடிக்கையில் ஈடுபட்டதால் உரிமையாளர் வழக்கிலும் மாட்டிக்கொண்டார். தற்போது இவர் போலீசார் கஸ்டடியில் உள்ளார். இந்த காரின் உரிமையாளர் மார்ச் 11-ம் தேதி பாங்க்ஸ்டவுன் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

  அந்த நபரின் பெயர் ஜீன்-பியர் மவுவாட் (Jean-Pierre Mouawad) ஆகும். இவர் கடந்த ஆண்டு மே மாதம் கார் க்ரூப் எல்.எம்.சி.டி பிளஸ் (car group LMCT Plus) நடத்திய ரேஃபிள் ரேசின் வெற்றியாளர் ஆவார். இதற்காக அவர் மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி சி 63 எஸ் (AMG C63S) வாகனத்தை பரிசாக பெற்றார். சுமார் 160,000 டாலர் மெர்சிடிஸை வென்றபோது இதனை என்னால் நம்ப முடியவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். அந்த சமயம், தான் உலகின் அதிர்ஷ்டசாலி மனிதர் என்று நினைத்த அந்த மனிதர், தற்போது நடந்த சம்பவத்தால் துரதிஷ்டசாலியாக மாறியுள்ளது வேதனையை தருகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ram Sankar
  First published: