Mehul Choksi | மெகுல் சோக்சி இந்தியக் குடிமகன் அல்ல, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது: வழக்கறிஞர் திட்டவட்டம்

மெகுல் சோக்ஸி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த மெகுல் சோக்சி இப்போது இந்தியக் குடிமகன் அல்ல, அதனால் அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த முடியாது என்று மெகுல் சோக்சியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

  • Share this:
    போலி ஆவனங்களை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற மெகுல் சோக்ஸி (வயது 62), கியூபாவிற்கு தப்பிச் செல்லும் வழியில் டொமினிகாவில கைது செய்யப்பட்டார்.

    இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற மெகுல் சோக்ஸி கியூபா சென்ற நிலையில் அங்கிருந்து தலைமறைவான பின்னர், கரீபிய தீவான ஆண்டிகுவா & பர்புடா நாட்டில் அவர் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டின் குடியுரிமையை பெற்று அங்கு வசித்து வரும் நிலையில் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்ட நகர்வுகளை இந்தியா மேற்கொண்டு வந்தது.

    ஆன்ட்டிகுவா மற்றும் பார்புடா பிரதமரான கேஸ்டன் பிரவுன் கைது செய்யப்பட்ட சோக்சியை டொமினிகாவிலிருந்து நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை வைத்தார், ஆனால் சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால், சோக்சி இப்போது இந்தியக் குடிமகன் அல்ல, ஏற்கெனவே இருக்கும் சட்டங்களின் படி அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த முடியாது என்று கூறியுள்ளார்

    டொமினிகா அரசும் சோக்சியை மீண்டும் ஆன் ட்டிகுவாவுக்கே அனுப்புவதை சுட்டிக்காட்டியுள்ளது.

    ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு ஆன்ட்டிகுவா பிரதமர் கார்ட்னி பிரவுன் அளித்த பேட்டியில், “இந்திய அரசு மற்றும் ஆன் ட்டிகுவா அரசுடன் டொமினிகா அரசு ஒத்துழைத்து செயல்படுகிறது. சோக்சியை ஆண்டிகுவாவுக்கு மீண்டும் அனுப்ப வேண்டாம், எனவே அவரை டொமினிகா நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

    ஆனால் டொமினிகா தேசியப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், சோக்சி சட்ட விரோதமாக நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டார் என்றும் சோக்சியின் குடியுரிமை நிலவரம் பற்றி ஆண்ட்டிகுவா பார்புடா அரசிடம் பேசி உறுதி செய்யவிருக்கிறோம். அந்தத் தகவல் கிடைத்தவுடன் அவர் ஆண்ட்டிகுவாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று கூறியுள்ளது.

    இதற்கிடையே டொமினிகாவில் சோக்சியின் வழக்கறிஞர் வெய்ன் மார்ஷிடம் சோக்சி ‘ஒரு இந்தியர் மற்றும் ஆண்டிகுவா போலீஸ் அதிகாரியும் மே 23ம் தேதி என்னைக் கடத்தி விட்டனர்’ என்று கூறியுள்ளார். அதாவது டின்னருக்காக உணவு விடுதி செல்லும் போது தான் கடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அதாவது தன் முகத்தை மூடி டொமினிகா கொடி பறந்த படகு ஒன்றில் ஏற்றி தீவின் தென்முனைக்குக் கொண்டு சென்றனர் என்கிறார் சோக்சி. மேலும் வெய்ன் மார்ஷ் கூறும்போது தான் சோக்சியைப் பார்த்த போது கண்கள் வீங்கி, உடலில் காயங்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.

    இதற்கிடையே மெகுல் சோக்ஸி கடலில் சில ஆவணங்களை தூக்கி எறிந்ததால், அதனை ஸ்கூபா டைவர்கள் உதவியுடன் தேடும் முயற்சியிலும் டொமினிகா காவல்துறையினர் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சோக்சியின் வழக்கறிஞர் அகர்வால் கூறும்போது, “மெகுல் சோக்சி வாயைத் திறக்காத வரை அவர் எப்படி டொமினிகாவுக்கு வந்தார் என்பது பற்றி ஊகங்களை வெளியிட முடியாது, அவர் தானாகவே டொமினிகா செல்லவில்லை என்பதுதான் என் கருத்து. எனவே என்னவோ நடந்திருக்கிறது. அவரை ஆண்ட்டிகுவாவுக்குத்தான் திருப்பி அனுப்ப முடியும் இந்தியாவுக்கு அல்ல.

    இந்தியக் குடியுரிமைச் சட்டம், பிரிவு 9-ன்படி, அவர் எப்போது ஆண்டிகுவா குடிமகன் ஆனாரோ அந்தக் கணம் முதல் அவர் இந்தியக் குடிமகன் அல்ல. அதனால் அவர் சட்டப்படி ஆண்ட்டிகுவாவில்தான் ஒப்படைக்கப்பட வேண்டும். மேலும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இந்திய அரசி கோரிக்கைக்கு தடை விதிக்கும் ஆண்டிகுவா உயர் நீதிமன்ற உத்தரவும் உள்ளது. எனவே அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
    Published by:Muthukumar
    First published: