ஹோம் /நியூஸ் /உலகம் /

நடக்க முடியலனா என்ன... நண்பர்கள் இருக்காங்க...! உலகை வலம்வரத் தொடங்கிய ’கெவன்’

நடக்க முடியலனா என்ன... நண்பர்கள் இருக்காங்க...! உலகை வலம்வரத் தொடங்கிய ’கெவன்’

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  கழுத்துக்கு கீழே எதுவும் இயங்காத நிலையில், நண்பர்களின் உதவியோடு உலகை வலம்வரத் தொடங்கியிருக்கிறார் இளைஞர் கெவன்.

  அமெரிக்காவில் வசித்து வரும் 32 வயதான கெவன், பிறவியிலேயே முதுகெலும்பு தசைநார் சிதைவு என்னும் மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்டவர். இது முதுகெலும்பில் உள்ள நரம்புகளை வாட்டி, தசைகளை பலவீனப்படுத்தி கழுத்துக்குக் கீழே உள்ள பகுதிகளை செயலற்றதாக்கிவிடும். இப்படிப்பட்ட கொடிய நோயால் பாதிக்கப்பட்ட கெவன், தன் இளமைக் காலம் முழுவதையும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கழித்துள்ளார்.

  இருப்பினும் அவருக்கு சாகசப் பயணங்களின் மீது தீராக் காதல் இருந்துள்ளது. பிற்காலத்தில் அந்தக் கனவு அவரின் நண்பர்களால் நிறைவேறியுள்ளது.

  குழந்தைப் பருவம் முதலே கெவனுக்கு இசை மீது ஆர்வமிருந்துள்ளது. ஆகையால் பள்ளி முதலே அவர் பல்வேறு இசைக்குழுக்களில் பங்கெடுத்து வந்துள்ளார். அதன் மூலம் அவரது கல்லூரிகாலத்தில் அவருக்கு, நான்கு உற்ற நண்பர்கள் கிடைத்துள்ளனர். இவர்களால் தான் பிற்காலத்தில் கெவனின் பயணங்கள் பதிவாகின. பிற்பாடு இக்குழுவில் மேலும் இரண்டு நண்பர்கள் தன்னார்வமாய் இணைய, குழுவின் எண்ணிக்கை கெவனையும் சேர்த்து 7 ஆக அதிகரித்துள்ளது.

  இவரின் பயணம் முதலில் தொடங்கியது 2015-ம் ஆண்டு ஐரோப்பாவிலிருந்து தான். பயணங்களின் போது மற்ற மாற்றுத்திறனாளிகளைப் போல சக்கர நாற்கலியில் வெறுமனே இருப்பதை கெவன் விரும்பவில்லை. அது மலையேற்றம் உள்ளிட்ட சாகசங்களின் போது, மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இதனை உணர்ந்த அவரது நண்பர்கள், இரும்புச் சட்டம் மற்றும் மேஜை இருக்கைகளை பயன்படுத்தி நாற்காலி வடிவிலான, முதுகில் சுமந்துச் செல்லக்கூடிய பிரத்யேக பை ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

  இதில் கெவனைச் சுமந்தபடியே அவரது ஆறு நண்பர்களும் ஐரோப்பாவை ஒரு மாதம் சுற்றி வந்துள்ளனர். இந்தப் பயணம் கொடுத்த உற்சாகம் அடுத்ததாக அவர்களை சீனாவை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது.

  இந்தமுறை சராசரி மனிதர்கள் கூட கடக்க சிரமம்படும் சீனப்பெருஞ்சுவர் உள்ளிட்ட பல பகுதிகளை கெவன் தனது நண்பர்களின் உதவியோடு அனாசயமாக கடந்துள்ளார். தன் பயண அனுபவங்களை தொகுத்து புத்தகமாக்கியுள்ளார், கெவன்.

  குறிப்பாக கெவன் நண்பர்களின் முதுகிலிருந்தபடி சீனப்பெருஞ்சுவரை ரசிக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக,  “இது எப்படி சாத்தியம்” உள்ளிட்ட பல கேள்விகள் ஆச்சரியமாக எழுந்தன. தற்போது இந்த நிகழ்வுகள் “we carry kevan”, நாங்கள் கெவனைச் சுமக்கிறோம், என்ற ஹேஷ்டேக்கில் சமூகவலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.

  இதன் தொடர்ச்சியாக இந்த நண்பர்கள் குழு அதே பெயரில் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் கெவன் போல் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவ தொடங்கியுள்ளனர். அந்த ’பிரத்யேக பை’யும் தற்போது பலரது வாழ்வில் மகிழ்ச்சியை பரவச்செய்துள்ளது.

  பொதுவாக மாற்றுத்திறனாளிக்கென பல பொது இடங்களில் பிரத்யேக வசதிகள் இருப்பதில்லை. பேருந்துகள், ரயில்கள் என இதன் பட்டியல் நீண்டுகொண்டே போகும். நிலைமை இப்படியிருக்க இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மாற்றுதிறனாளிகளுக்கும் உலகின் பல பகுதிகளை எளிதாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் பயணமாகிறார் கெவன்.

  Also See...

  Published by:Sankar
  First published: