வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக ஆப்கானிஸ்தானில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் நிலவுவதாக ஆய்வு அறிக்கை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவு பற்றாக்குறை குறித்து ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில், சுமார் 2 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி, பசியால் வாடி வருகின்றனர். அந்நாட்டிற்கு பல்வேறு வழிகளில் உணவு உதவி கிடைத்து வந்தது. அந்த உதவியானது கடந்த சில மாதங்களி ல் சுமார் 66 சதவீதம் குறைந்துள்ளது. பாதிப்புக்குள்ளான 2 கோடி மக்களில், 1.3 கோடி மக்கள் அபாய நிலையிலும், 66 லட்சம் மக்கள் அவசர நிலையும், 20,324 மக்கள் மிக மோசமான நிலையிலும் உள்ளனர்.
இதற்கு உலகளாவிய சூழலும் முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் உலகளவில் உணவு விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பல நாடுகளில் உணவு விலை கட்டுக்கடங்காத உயர்வை சந்தித்துள்ளது. இதில் ஆப்கானிஸ்தான், தான் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பொருளாதார நிபுணர் அஸேராக்ஸ் ஹபிஸி கூறுகையில், இதே நிலைமை நீடித்தால் ஆப்கானிஸ்தானில் மாபெரும் மனித அழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சீர் செய்ய ஆப்கானிஸ்தான் அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு அமெரிக்க ராணுவத்தினர் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். அமெரிக்க நேச நாட்டு படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து அந்நாட்டின் ஜனநாயக அரசை வீழ்த்தி தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இதையும் படிங்க:
தலைமறைவான மகிந்தா ராஜபக்சே - திரிகோணமலையில் திரும்பிய வரலாறு
இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே ஆப்கானிஸ்தானில் மிக மோசமான சூழல் நிலவிவருகிறது. பொருளாதார பிரச்னையுடன் சேர்த்து மனித உரிமை மீறல், பாலின சமத்துவமின்மை போன்ற சிக்கல்களும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.