காதலுக்கு கண்ணில்லை என்பார்கள், அதை மெய்ப்பிக்கும் விதமாக இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் பார்க்காமல் காதலித்த நபரை அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளார். காதல் எதையும் எதிர்பார்க்காது, அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் என கதைகளிலும், கவிதைகளிலும் கேள்விப்பட்டிருப்போம். அதனை இங்கிலாந்தைச் சேர்ந்த லாரா ஓ'சுல்லிவன் என்ற 32 வயது பெண்மணி நிஜமாக்கியுள்ளார். ஆம், இவர் இதுவரை பார்க்காமல் காதலித்து வந்த தனது காதலனை அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதில் என்ன பிரமாதம் இதைத் தான் ‘காதல் கோட்டை’ படத்திலேயே காட்டிவிட்டார்களே, அதன் பின்னர் பல சம்பவங்கள் இதே பாணியில் அரங்கேறியுள்ளதே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் லாரா காதலித்த நபர் இருப்பது சிறைச்சாலை கைதியாக. ஆம், சிறைக்கைதியான டெரெல் ராவோன் ரீஸ் உடன் 4 குழந்தைகளுக்கு தாயான லாரா 2021ம் ஆண்டு முதல் பழகி வருகிறார்.
வெளிநாடுகளில் சிறைக்கைதிகளுக்கு மன அழுத்தம் வராமல் இருக்க அவர்களுடன் சமூக சேவை எண்ணம் கொண்டவர்கள் போன் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் பேசிக்கொள்வார்கள். அவர்களுக்கு ஒரு உறவாக இருந்து கைதிகள் சொல்வதை கேட்கவும், அதற்கு பதிலளிக்கவும் செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு செல்போன் உரையாடல் மூலமாக தான் டெரெலுக்கும், லாராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக இருவரும் பழகி வந்தாலும், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது கிடையாது.
ஆனால் கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் காதல் வளர்த்துள்ளனர். தான் செய்த குற்றங்கள் பற்றியும், இப்போது மனம் திறந்து வாழ நினைப்பதையும் டெரெல், லாராவிடம் வெளிப்படையாக கூறியுள்ளார். டெரெலின் இந்த நடவடிக்கை லாராவுக்கு பிடித்துப்போயுள்ளது. இதனால் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இதனிடையே ரீஸ் லாராவிற்கு தொலைபேசியில் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என கேட்டுள்ளார். அதற்கு லாராவும் சம்மதம் தெரிவிக்கவே, தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இருவருக்கும் இடையேயான காதலுக்கு இப்போது லாராவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர்களின் திருமணம் சிறையில் நடைபெற உள்ளது. இதில் திருச்சபை முகவர் ஒருவரும், ஒரு விருந்தினர் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கிடையில், ரீஸை நேரில் சந்தித்து அவருடன் அமெரிக்கா செல்ல லாரா தனது மூத்த மகனை அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
Also Read... அடேங்கப்பா.. இந்த தலையணையின் விலை ரூ.45 லட்சமா.! அப்படி என்ன ஸ்பெஷல்
இதற்கிடையில், இதேபோன்று கெல்லி ஜேக்கப்ஸ் என்ற டச்சு பெண், சிறை தண்டனை பெற்ற ஜேம்ஸ் டென்டலை திருமணம் செய்ய முடிவு செய்தார். அந்த நபர் தனது 20 வருட சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். மேலும் 2032 வரை வெளியே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் கெல்லியிடம் வீடியோ அழைப்பின் மூலம் தனது காதலை முன்மொழிந்தார். மேலும் அந்த பெண்ணின் பெற்றோர் முதலில் அவர்களது உறவை பற்றி தயங்கினார்கள், ஆனால் அவர்கள் ஜேம்ஸுடன் பேசி திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர். இந்த ஜோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.