முகப்பு /செய்தி /உலகம் / காதலை வளர்த்த கொரோனா.. இயல்புநிலை வந்ததும் தடுமாறும் காதலர்கள்! என்ன காரணம்?

காதலை வளர்த்த கொரோனா.. இயல்புநிலை வந்ததும் தடுமாறும் காதலர்கள்! என்ன காரணம்?

காதலர்கள்

காதலர்கள்

ஊரடங்கு காலத்தில் இருந்த நெருக்கம் ஊரடங்கு தளர்வின் போது தளர்ந்தே போயிருந்தது.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • india , India

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுதும் கவலையை மட்டுமல்ல காதலையும் வளர்த்துள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து திரும்பிய இயல்பு நிலை காதலர்களுக்கு கஷ்டங்களையும் கொடுத்துள்ளது. இயல்பு நிலையால் கொரோனா காலத்து காதல் சந்தித்த இன்னல்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

இருபுறமும் காதல், இடையில் கண்ணாடி - கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் படம் பிடிக்கப்பட்ட இந்தக் காட்சி உலகத்தையே நெகிழ வைத்தது.சீனாவின் ஹாங்ஸோ நகரில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த சென் யிங் என்னும் செவிலியர், பெருந்தொற்று பரவலால் மருத்துவமனையிலேயே தங்கிப் பணிபுரிந்து வந்தார். இரு வாரங்கள் தன் காதலனை சந்திக்க முடியாமல் தவித்த நிலையில், சென் யிங்கை தேடி மருத்துவமனைக்கே வந்தார் அவரது காதலர். தேக்கி வைத்த அன்பை கண்ணாடி வழியே இருவரும் பரிமாறிக் கொள்ள இணையம் பரபரத்தது.

கொரோனாவால் முடக்கி வைக்கப்பட்ட காதலர்கள் எல்லையற்ற காதலால் நாடுகளின் எல்லைகளில் சந்தித்துக் கொண்ட சம்பவங்களும் அப்போது நிகழ்ந்தன. ஹங்காங்கும் சீனாவும் எல்லைகளை மூடியிருந்த நிலையில், சீனாவின் எல்லைப்பகுதிக்கு வந்த காதலன், எதிர்ப்பக்கம் ஹாங்காங்கின் எல்லையில் நின்ற தன் காதலிக்கு காற்றின் வழியே காதல் முத்தம் அனுப்பியது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியது.

காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்; ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! என்று பாரதி முன்மொழிந்ததை கொரோனா காலகட்டம் வழிமொழிந்தது. வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடந்த மக்கள் தங்கள் அன்றாட நெருக்கடிகளில் இருந்து விட்டு விடுதலையாகி, துணை தேடத் தொடங்கினர். இயல்பான உலக இயக்கம் நின்று போன நிலையிலும், காதல் இயக்கம் தடைபடாது தொடர்ந்தது. ஏகப்பட்ட நேரம் கிடைத்ததால் செலவழிக்க துணை வழங்கின டேட்டிங் ஆப்கள். இவை போக, வீடுகளின் மொட்டை மாடியில் உலாவவு  உடற்பயிற்சி செய்யவும் வந்தவர்கள் உள்ளத்தைப் பறிகொடுத்த தரமான சம்பவங்களும் நிகழ்ந்தன.

சைபீரியாவின் நித்தியானந்தா.. இயேசுவின் அவதாரம் எனக் கூறும் செர்கே டோரோப்..

அப்படி அண்டை வீட்டு மொட்டைமாடியை தன் காதல் வலையில் வீழ்த்திய கோஹன் என்பவர், டிரோன் மூலமாக தன் செல்ஃபோன் எண்ணை அனுப்பினார். டிரோன் விடு தூதால் செல்ஃபோன் எண் கிடைத்த நிலையில், செல் உருக, பில் பெருக காதல் வளர்ந்து கொண்டே போனது. ஒரு கட்டத்தில் எப்படியாவது தன் காதலியை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டார் கோஹன். இதற்காக ஒரு விசேஷ பாதுகாப்புக் குமிழியை தயார் செய்தார். அந்தக் குமிழிக்குள் தான் நுழைந்து கொண்டு அப்படியே காதலியின் வீட்டு வாசலுக்கு சென்றார். வெளியே வந்து பார்த்த அவரது காதலி விழுந்து விழுந்து சிரிக்க. அவர்களது காதலும் சிறகு விரித்துப் பறந்தது.

இப்படி பல்வேறு விதங்களில் உருவாகி, பிரமாண்டமாக வளர்ந்த காதல்களுக்கு இயல்பு நிலை என்ற பெயரில் இக்கட்டு வந்தது. அன்றாடம் எழுந்து அலுவலகம் சென்று பணிகளை முடித்துக் களைத்து வீடு திரும்பி, வீட்டிலுள்ள வேலைகளைச் செய்து முடித்து உறங்கச் செல்வது என்ற இயல்பு நிலைக்கு மாறாக இருந்த காலகட்டத்தில் மலர்ந்த காதல் உறவுகள், இயல்பு நிலை திரும்பியபோது பெரும் தடுமாற்றத்தை உணர்கின்றன.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெசிகா ஹேமன், கடந்த 2020 ஆம் ஆண்டு ஊரடங்கின் போது தனது காதலரை டிண்டர் ஆப் மூலமாக சந்தித்திருக்கிறார். பூங்காவில் நடைபயணம், தொலைபேசி உரையாடல்கள் என ஏகத்துக்கும் கிடைத்த நேரத்தால் அவர்களது காதல் எக்குத் தப்பாக வளர்ந்தது. ஆனால் இயல்பு நிலை திரும்பியபோது நிஜ வாழ்க்கையின் அழுத்தம் இருவருக்குள்ளும் பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. ஓய்வாக இருந்த காலகட்டத்தில் மறைந்திருந்த இருவரின் ஆளுமைகளும் ஆளுக்கொரு திசையில் ஓடியபோது வெளிப்பட்டது. ஊரடங்கு காலத்தில் இருந்த நெருக்கம் ஊரடங்கு தளர்வின் போது தளர்ந்தே போயிருந்தது.

ஊரடங்கு காலத்தில் அன்றாட வாழ்க்கையின் கவனச்சிதறல்களிலிருந்து விடுபட்டு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் தடையின்றி நேரத்தை ஒதுக்க முடிந்தது என்றும், அப்போது ஒரு உறவில் வெளிப்புறத் தாக்கங்கள் எதுவும் இல்லை என்றும் கூறுகிறார் அமெரிக்க உளவியலாளர் மற்றும் உறவு நிபுணரான ஜெசிகா க்ரிஃபின் (Jessica Griffin).

தனது 13 பற்களை தானே வலுக்கட்டாயமாக பிடுங்கிய பெண்மணி! ஏன்? எதற்காக இப்படி செய்தார்?

சிகாகோவைச் சேர்ந்த ஜெனிஃபர் கிளெஸ்மன் (Jennifer Klesman) ஊரடங்கு காலத்தில் தன் துணையைச் சந்தித்தார். வாரத்தில் மூன்று முறை சந்திப்பது, ஸூம் ஆப் மூலம் உரையாடுவது, வீடியோ கேம்களை இணைந்து விளையாடுவது என அவர்களது காதல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போது இருவரும் மெக்ஸிகோவுக்கு கூட சென்று வந்தனர். ஆனால் இயல்பு நிலை திரும்பியபோது ஊரடங்கு தனது துணையைப் பற்றிய சில உண்மைகளை மறைத்துவிட்டதை உணர்ந்தார். மேலும் அவர் ஆரம்பத்தில் நினைத்தது போல் அவரது காதலன் முழுநேர பணியாளர் இல்லை என்பதுவும், நிதி ரீதியாக பாதுகாப்பாக இல்லை என்பதுவும் தெரியவந்தது. இதனால் 10 மாதங்களில் அவர்களது உறவு முறிந்தது.

ஊரடங்கிற்குப் பின் காதலர்கள் தாங்கள் நினைத்ததைப் போல் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்பதை பலர் உணரத் தொடங்கியுள்ளனர் என்று கூறும் ஜெசிகா, இந்த உறவுகள் மன அழுத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டன என்றும் பின்னாளில் ஒருவரது முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் மாறியிருக்கலாம் என்றும் கூறுகிறார். அதே சமயம் ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக் கொடுத்து செல்லும் தம்பதிகளின் உறவு நிலைத்தே நிற்கிறது.

இதற்கு உதாரணமாக இருக்கின்றனர் அலைன் தம்பதிகள். ஊரடங்கிற்கு முன்பாக இருவரும் இரண்டு மணி நேரம் சந்திப்பதே அரிதாக இருந்திருக்கிறது. இரவில் வீடு வரும் இருவரும் களைப்பில் உறங்கி விட, இருவருக்குள்ளும் சரியான புரிதல் இல்லாமலே வாழ்க்கை சண்டை சச்சரவுடன் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட, இருவரும் ஒரே வீட்டிற்குள் பல நாட்கள் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்போது ஏதாவது சண்டை ஏற்பட்டாலும் அடுத்த 5 நிமிடங்களுக்குள் அதனைப் பேசித் தீர்த்துள்ளனர். இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது. ஊரடங்கு தங்களது உறவை வலுப்படுத்தி இருப்பதாகக் கொண்டாடுகின்றனர்

ஊரடங்கு ஒரு குக்கரைப் போன்றது என்று கூறும் இவர்கள், அதனை சரியாகப் பயன்படுத்தா விட்டால் வெடித்து விடும் என்றும், சரியாகப் பயன்படுத்தினால் சுவையான உணவைத் தரும் என்றும் விளக்கம் அளிக்கின்றனர். கொரோனா வைரஸைக் காட்டிலும் காதல் வைரஸ் வலிமையானது என்பதை உணர்த்தி இருக்கிறது இந்த காலகட்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Corona, Covid-19, Lockdown, Love breakup