இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்: கணவருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த கேரளப் பெண் உயிரிழப்பு!

தாக்குதலில் உயிரிழந்த செளமியா

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடந்த சமயத்தில், செளமியா கேரளாவில் உள்ள தனது கணவர் சந்தோஷூடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

  • Share this:
    இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ஜெருசலேம் யாருக்கு சொந்தம் என்பதில் அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு உள்ளது. இதன்காரணமாக எல்லையில் அடிக்கடி இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும். அந்தவகையில், இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் கடந்த 4 நாட்களாக கடும் மோதல்கள் வெடித்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு ராக்கெட் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய குழுக்கள் மற்றும் பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் மற்றும் பீர்ஷீபா மீது ராக்கெட் வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இஸ்ரேல் தாக்குதலில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் காஸாவில் இடிந்து விழுந்தது. இன்னொரு கட்டிடம் உருத்தெரியாமல் ஆனது. ஹமாஸ் உளவுத்துறையினர் மீது நடத்திய தாக்குதலில் பலி அதிகம் என்று கூறுகிறது இஸ்ரேல். மேலும் ஹமாஸ் ராக்கெட் வீச்சுத் தளம் மற்றும் ஹமாஸ் அலுவலகங்களைக் குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது.

    காஸாவில் 2014-ல் நடந்த மோதலுக்கு பிறகு இப்போது பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    இந்தநிலையில், ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நேற்று இரவு நடத்திய வான்வெளி தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

    கேரளாவின் இடுக்கி மாவட்டம் கீரித்தோடு பகுதியை சேர்ந்தவர் செளமியா (31). இவர் இஸ்ரேலில் கடந்த 7 வருடங்களாக ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடந்த சமயத்தில், செளமியா கேரளாவில் உள்ள தனது கணவர் சந்தோஷூடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, செளமியா இருந்த குடியிருப்பின் மீது ராக்கெட் விழுந்ததாக தெரிகிறது.

    இந்தசம்பவம் தொடர்பாக சௌமியாவின் உறவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, செளமியாவுடன் அவரது கணவர் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போது, பெரும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக இணைப்பும் துண்டித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேலில் வசிக்கும் சக மலையாளிகளை தொடர்பு கொண்டபோது, நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.

    இதனிடையே, செளமியாவின் உயிரிழப்பை உறுதி செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு, ஜெருசலேமில் நடந்த வன்முறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருதரப்பினரும் அமைதி காக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: