வெள்ளை மாளிகையில் காஷ்மீர் பெண்.. இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்க அதிபர் பிடன்..

வெள்ளை மாளிகையில் காஷ்மீர் பெண்.. இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்க அதிபர் பிடன்..

அயிஷா ஷா

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியாற்றுவதற்கான டிஜிட்டல் குழுவில் காஷ்மீரில் பிறந்த ஆயிஷா ஷா இடம்பிடித்துள்ளார்

  • Share this:
அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியாற்றுவதற்கான டிஜிட்டல் குழுவில் காஷ்மீரில் பிறந்த ஆயிஷா ஷா இடம்பிடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். வரும் ஜனவரி மாதம் புதிய அதிபராக ஜோ பிடனும், அவருடன் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் துணை அதிபராகவும் முறைப்படி பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில், தன்னுடன் பணியாற்றபோகும் பல்வேறு குழுக்களின் உறுப்பினர்களை தேர்தெடுத்து ஜோ பிடன் அறிவித்து வருகிறார். அதன்படி, வெள்ளை மாளிகையில் பணியாற்றும் டிஜிட்டல் குழு உறுப்பினர்களை அறிவித்துள்ளார். 

அதில், காஷ்மீரில் பிறந்த ஆயிஷா ஷா என்ற பெண் இடம்பிடித்துள்ளார். வெள்ளை மாளிகை டிஜிட்டல் குழுவின் சீனியர் பார்ட்னர்ஷிப் மேனேஜராக அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஜோ பிடன் குழுவின் முக்கியப் பொறுப்பில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆயிஷா ஷா, அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பிடன் - ஹமலா ஹாரீஸ் பிரச்சாரத்தின் டிஜிட்டல் குழுவில் பணியாற்றியுள்ளார். Smithsonian நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர், ஜான் எஃப் கென்னடி கார்ப்பரேட் நிதியத்தின் துணை மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார். 

மேலும், Buoy நிறுவனத்தின் உத்தி வகுப்பாளர் குழுவில் கம்யூனிகேசன் ஸ்பெஷலிஸ்டாகவும் இருந்துள்ளார். அதில், லாபநோக்கமற்றவர்களைக் கொண்டு பாப் கலாச்சாரத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். பிரென்டன் கோஹென் (Brendan Cohen) மகா ஹன்தோர் (Maha Ghandour), ஜொனாதன் ஹெர்பர்ட்(Jonathan Hebert), ஜாமியல் லோபெஸ் (Jaime Lopez),  உள்ளிட்ட பலரும் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையின் இணைய குழுவின் இடம்பெற்றுள்ள புதிய உறுப்பினர்கள், தங்களின் புதிய டிஜிட்டல் உத்தி மூலம் வெள்ளை மாளிகையையும், அமெரிக்க மக்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரிவுப் பாதையில் இருக்கும் அமெரிக்காவை மீட்டெத்து கொண்டு வருவதற்கும், அரசின் நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைப்பதற்கும் புதிய டிஜிட்டல் குழு தங்களின் அசாத்திய திறமைகளை பயன்படுத்துவார்கள் என அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்கும் புதிய டிஜிட்டல் குழு உறுப்பினர்கள்,  அமெரிக்காவை கட்டியெழுப்ப தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள் என்றும், அதனை முதல் நாளிலிருந்து கண்கூடாக பார்க்க முடியும் என்று பிடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்ற அதிபர்களைக் காட்டிலும் பிடன் - ஹமலா ஹாரீஸ் கூட்டணி டிஜிட்டலில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் எனக் கூறப்படுகிறது. இது குறித்து பேசிய அமெரிக்க துணை அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரீஸ், கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் டிஜிட்டலின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். நிர்வாகம் மற்றும் மக்களுக்கான சேவை என அனைத்து தளங்களிலும் டிஜிட்டல் மூலம் சிறப்பான நடவடிக்கை எடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், அதனை உரிய முறையில் பயன்படுத்துவதற்காகவே மிகவும் வலிமை வாய்ந்த டிஜிட்டல் குழுவை தாங்கள் ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Published by:Gunavathy
First published: