நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கார்டே பர்வான் என்ற இடத்தில் சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாரா உள்ளது. இந்த குருத்வாராவில் இன்று காலை பயங்கரவாதிகள் உள்ளே புகுந்து வெடிகுண்டுகளை வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் குருத்வாராவின் பாதுகாவலர் உட்பட 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து அங்கு விரைந்த தாலிபான் அரசின் காவல்துறையினர் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தி அப்பகுதிக்கு பாதுகாப்பு அளித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சீக்கியர்கள், இந்துக்கள் 100 பேருக்கு விரைவாக இ.விசா வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. முகமது நபிகள் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்துக்கள், சீக்கியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். தங்கள் போராளிகளில் ஒருவர் "காபூலில் உள்ள இந்து மற்றும் சீக்கிய பலதெய்வ வழிபாட்டாளர்களுக்கான கோவிலுக்குள் ஊடுருவி, அதன் காவலரைக் கொன்ற பிறகு, உள்ளே இருந்தவர்கள் மீது தனது இயந்திர துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளால் சுட்டார்" என ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: ஆப்கானிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து குருத்வாராவில் தாக்குதல் - இந்தியா கடும் கண்டனம்
ஐ.எஸ்.ஐ.எஸ். , தாலிபன் ஆகிய இரண்டுமே சன்னி வகை இஸ்லாமிய பிரிவை சேர்ந்தவை என்றபோதிலும் கருத்தியல் தொடர்பாக மிகப்பெரிய வேறுபாடு இரு அமைப்புகளுக்கும் இடையே உள்ளது. தாலிபன் அரசு பொறுப்பேற்ற பின்னர் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பெருமளவு குறைந்தது. எனினும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.