வியாழனும் சனியும் இணைந்து ஒளிரும் பேரிணைவு.. 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும்.. (வீடியோ)

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் - கோப்புப் படம்

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அரிய நிகழ்வான கிரகங்களின் பேரிணைவு இன்று நிகழ்கிறது.

 • Share this:
  இரு கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு கிரகங்களின் இணைவு என்று அழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்தின் இரு பெரும் கிரகங்களான வியாழனும், சனியும் இணையும் நிகழ்வை பேரிணைவு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்று நிகழும் பேரிணைவின் போது இரு கிரகங்களும் இணைந்து ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல வானில் தோன்றும்.

  சூரிய குடும்பத்தில் உள்ள பூமி உள்ளிட்ட கிரகங்கள் சூரியனை வெவ்வேறு நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. பூமி சூரியனைச் சுற்றி வர ஓராண்டு எடுத்துக் கொள்கிறது. இதே போல வியாழன் ஒருமுறை சூரியனைச் சுற்றி வர 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் சனி கிரகம் ஒருமுறை சூரியனை சுற்றிவர இருபத்து ஒன்பதரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இப்படி வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றி வரும் இந்த கிரகங்கள் அவ்வப்போது ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன.

  வியாழனும் சனியும் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. ஆனால் இரண்டு கிரகங்களும் மிக நெருக்கமாக வரும் நிகழ்வு கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முன்பு 1623 ஆம் ஆண்டிலும், 1226 ஆம் ஆண்டிலும் இத்தனை நெருக்கமாக இந்த கிரகங்கள் தோன்றியிருக்கின்றன. 1623 ஆம் ஆண்டுக்குப் பிறகு 397 ஆண்டுகள் கழித்து மீண்டும் பேரிணைவு நிகழ்வதால் டிசம்பர் 21 ஆம் தேதியான இன்று வானியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

  இந்த பேரிணைவை தொலைநோக்கிகள் உதவியின்றி வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பின்னர் தென்மேற்கு வானத்தில் பிரகாசமான ஒரு நட்சத்திரம் போல இரு கிரகங்களும் இணைந்து ஒளிரும். மாலை 6.30 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் வரை இந்த பேரிணைவை நாம் கண்டு ரசிக்க முடியும். வானத்தை தங்கு தடையின்றி பார்க்கும் வகையில் வெட்ட வெளியிலோ அல்லது மொட்டை மாடியிலோ நின்று கொண்டு இந்த அரிய நிகழ்வை காண முடியும்.

  மிரட்டும் கொரோனா.. உலகளவில் 7 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு

  இதற்கு முன்பாக 400 ஆண்டுகள் இடைவெளியில் தோன்றியிருந்தாலும் இதன் பிறகு 2080 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி இதே போல இரு கிரகங்களும் நெருங்கி வரும் என வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.  இரு கிரகங்கள் இணைந்து நட்சத்திரம் போல ஒளிரும் நிகழ்வு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய பிரகாசமான ஒரு நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று ஞானியர் சிலர் குழந்தை இயேசுவை பார்த்ததாக பைபிளில் கூறப்படுகிறது. அப்போது தோன்றிய நட்சத்திரம் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது தனியொரு நட்சத்திரம் அல்ல என்றும் இதுபோன்ற இரு கிரகங்களின் இணைவே நட்சத்திரம் போல ஒளிர்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: