HOME»NEWS»INTERNATIONAL»joe biden takes oath as a president of america skd

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
பதவியேற்கும் ஜோ பைடன்
  • Share this:

உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். அமெரிக்க அரசியல்சாசனப்படி நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அதன்படி, இந்திய நேரப்படி இன்று இரவு 10.20 மணி அளவில் ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார். அவருக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.



அதிபராக பதவியேற்ற பின் பேசிய ஜோ பைடன், ‘நான் அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன். ஜனநாயகத்தைப் பாதுகாப்பேன். நான் அமெரிக்காவைப் பாதுகாப்பேன். அது அமெரிக்காவின் நாள், இது ஜனநாயகத்தின் நாள். வரலாறு மற்றும் நம்பிக்கையின் நாள். நான் அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பேன். இங்கே வருகை தந்திருக்கும் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த முன்னாள் அதிபர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நமது அரசியலைப்புச் சட்டத்தின் எதிர்ப்புத்திறன் மற்றும் வலிமையை நான் அறிவேன். நாம் உள்நாட்டு தீவிரவாதம், வெள்ளையின வாதத்தை தோற்கடிக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: