அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அதிபாராக நேற்று பதவியேற்றார். பொதுவாக அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவில் விரிவான பாதுகப்பு திட்டங்கள் இருக்கும். கடந்த 6ம் தேதி நாடாளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால், தலைநகர் வாஷிங்டன் முழுவதும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் பதவியேற்பு நிகழ்ச்சியை காண சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் வரை பொதுமக்களுக்கு வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா தொற்று மற்றும் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாருக்கும் டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை.
இந்திய நேரப்படிநேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய பதவியேற்பு விழாவில், ஜோ பைடனின் ஆதரவாளரான அமெரிக்க பாடகி லேடி காகா தேசிய கீதம் பாடினார். தொடர்ந்து, நடிகை ஜெனிபர் லோபசின் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 10.30 மணியளவில் அமெரிக்க உச்சநீதிமன்ற பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர், துணை அதிபராக கமலா ஹாரிசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் படிக்க...வல்லரசின் வேந்தர்களை வாழ்த்திய பிரதமர் மோடி
அவரைத் தொடர்ந்து, அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் புதிய அதிபராக ஜோ பைடனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பைடன், அமெரிக்காவின் வளர்ச்சிக்கான தனது திட்டங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிகள், ஜோ பைடன் குழுவின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட தளங்களிலும் நேரலை செய்யப்பட்டன.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.