Home /News /international /

சைபீரியாவின் நித்தியானந்தா.. இயேசுவின் அவதாரம் எனக் கூறும் செர்கே டோரோப்..

சைபீரியாவின் நித்தியானந்தா.. இயேசுவின் அவதாரம் எனக் கூறும் செர்கே டோரோப்..

சைபீரியாவின் நித்தியானந்தா..

சைபீரியாவின் நித்தியானந்தா..

Jesus of Siberia | பாலியல் அத்துமீறல், பண மோசடி என புகார்கள் குவிந்ததால், 2020 செப்டம்பரில் செர்கேவை தட்டித் தூக்கியது ரஷ்ய போலீஸ்.

  பரமேஸ்வரனின் அவதாரம், மீனாட்சி அம்மனின் மறுபிறவி என கூறி கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கிய நம்மூர் நித்தியானந்தாவைப் போல, சைபீரியாவில் இயேசுவின் மறுபிறவி என மக்களை ஏமாற்றியிருக்கிறார் ஆசாமி ஒருவர். 

  கதவைத் திற காற்று வரட்டும் என்ற ஆன்மீகத் தொடர் மூலம் மக்களிடையே பிரபலமடைந்து, நடிகை ரஞ்சிதாவால் சர்ச்சையில் உச்சம் தொட்டவர் நித்தியானந்தா.

  அடிக்கடி காமெடியாக கதைவிடுவதோடு, சூரியன் உதிப்பதையே நிறுத்தி வைத்ததாகக் கூறி பக்தர்களை பிரமிக்க வைத்தவர். பாலியல் புகார் மற்றும் சிறுமிகள் கடத்தல் வழக்குகளால் தலைமறைவான நித்தியானந்தா, கைலாசா என்ற ஒரு தனி நாட்டையே உருவாக்கிக் கொண்டவர். நித்தியானந்தாவைப் போலவே, இயேசுவின் மறுபிறவி எனக் கூறிக் கொண்டு தனி ஊரை உருவாக்கியவர் செர்கே டோரோப் (Sergei Torop). தெற்கு ரஷ்யாவில் 1961 ஜனவரியில் பிறந்த இவர், சோவியத் ரஷ்யாவில் போக்குவரத்து போலீஸ் அதிகாரியாக பணியாற்றியது பழைய கதை.

  1989ஆம் ஆண்டில் அரசு வேலையை உதறிவிட்டு, இறைபணியில் ஈடுபட்டு வந்த அவர், 1991ல் தொடங்கியதுதான் கடைசி ஏற்பாட்டு தேவாலயம் என்ற திருச்சபை. இயேசுநாதரைப் போல் வெள்ளை நிற அங்கி மற்றும் நீண்ட தலைமுடியுடன் காட்சியளித்து, சீடர்களுக்கு போதித்து வந்தார் செர்கே டோரோப். தான் கடவுள் அல்ல, இயேசுவும் கடவுள் அல்ல; கடவுளின் வார்த்தையே நான் என்ற அவரது பேச்சில் மயங்கியவர்களில் வெளிநாட்டினரும் ஏராளம். டிசம்பர் 25ஆம் தேதிக்கு பதிலாக, இவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது செர்கோ டோரோப்பின் பிறந்தநாளான ஜனவரி 14.

  செர்கே டோரோப்


  இயேசுவின் மறுபிறவி என்று கூறி பிரசங்கம் செய்த அவருக்கு, சைபீரியாவில் மட்டுமே சீடர்களின் எண்ணிக்கை சுமார் 7 ஆயிரம். சீடர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடம் வாங்கிய நன்கொடைகள் மூலம் தனி ஓர் ஊரை உருவாக்கினார் செர்கே டோரோப்.

  அவரது ஊரில் புலால், மது மற்றும் பணத்தை பயன்படுத்த அனுமதி இல்லை என்றாலும், அவர் மட்டும் பணத்தை வாங்கிக் கொண்டார் பக்தர்களிடம் இருந்து. நம்மூர் நித்தியானந்தாவைப் போலவே தனி சிம்மாசனம், அதன் முன்பு ஒரு மைக் என பிரசங்கத்தை நடத்தி வருவார் செர்கே டோரோப்.

  இதையும் படிங்க: இரண்டு வருடமாக வீட்டில் இறந்து கிடந்த பெண் - அப்படியும் வாடகை வசூலித்த அவலம்!

  அதுமட்டுமின்றி, நித்தியானந்தா மீது என்னென்ன வழக்குகள் இருக்கிறதோ, அத்தனை வழக்குகளுக்கும் செர்கே டோரோப் மீதும் உண்டு. அதுபோக சட்டத்திற்கு புறம்பான மத அமைப்பு நடத்தியதும் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று. பாலியல் அத்துமீறல், பண மோசடி என புகார்கள் குவிந்ததால், 2020 செப்டம்பரில் செர்கேவை தட்டித் தூக்கியது ரஷ்ய போலீஸ். இயேசுவின் மறுபிறவி என மக்களுக்கு அறிவுரைக் கூறியவர், இப்போது இரண்டு ஆண்டுகளாக சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

  பலமுறை ஜாமினுக்கு முயற்சித்தும், வடிவேலு காமெடியைப் போல ”கடல்லயே இல்லையாம்” என்று சொல்லிவிட்டன ரஷ்ய நீதிமன்றங்கள். சைபீரியா நித்தியானந்தா கம்பி எண்ணும் கதை தொடரும் நிலையில், இன்னும் நேரலையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார் நம்மூர் நித்தியானந்தா.
  Published by:Kannan V
  First published:

  Tags: Nithyananda, Russia

  அடுத்த செய்தி