காதலுக்காக தனது அரச பட்டத்தை துறந்த ஜப்பான் இளவரசி மகோ, இளவரசியாக தன்னுடைய கடைசி பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அடுத்த வாரம் தனது காதலரை அவர் திருமணம் செய்யவுள்ளார்.
ஜப்பான் மன்னர் நருஹிதோவின் இளைய சகோதரரின் மகளான மகோ சாமானியரான கெய் கொமுரு (Kei Komuro) என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். கடந்த 2012ம் டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இருவருக்கும் அறிமுகமாகியுள்ளது. இந்த அறிமுகம் பின்னர் காதலாக மாறியது.
கெய் கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2018ஆம் ஆண்டே திருமனம் செய்து கொள்ள தீர்மானித்திருந்தனர். ஆனால் கொமுருவின் குடும்பத்தில் நிதி பிரச்சனை நிலவியதால் திருமணம் தள்ளிப் போனது. தற்போது இவர்களின் திருமணம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு பிறகு அவர்கள் அமெரிக்காவுக்கு குடிபோக உள்ளனர்.
ஜப்பான் அரச குடும்ப விதிகளின்படி, அரச குடும்பத்திலிருந்து வெளியே ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் அவர் அரசு குடும்பத்தை விட்டு வெளியேற நேரிடும். எனினும், தனது காதலுக்காக ஜப்பான் இளவரசி மகோ அரச பட்டத்தை துறக்க தயாராக உள்ளார். அரசு குடும்பத்தில் இருந்து தனக்கு அளிக்கப்படுவதாக கூறப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: மெக்சிகோவில் போதைப் பொருள் கும்பல் இடையே துப்பாக்கிச்சூடு: இந்திய பெண் என்ஜினீயர் பலி ஆன சோகம்!
இந்நிலையில், இளவரசி மகோவின் 30வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இளவரசியாக அரசு குடும்பத்தினருடன் அவர் கொண்டாடிய கடைசி பிறந்த நாள் இதுவாகும். பிறந்தநாளை ஒட்டி, இளவரசி மாகோ தனது தங்கையுடன் அரச மைதானத்தில் நடந்து செல்லும் புகைப்படங்களை இம்பீரியல் ஹவுஸ்ஹோல்ட் ஏஜென்சி வெளியிட்டுள்ளது.
மேலும் படிங்க: பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநரை அறைந்த நபர்: வைரலாகும் வீடியோ!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.