அமெரிக்க படைகளின் அதிரடி தாக்குதலின் போது தற்கொலை தாக்குதல் நடத்தி ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல்-பக்தாதி உயிரிழந்த நிலையில் புதிய தலைவரை அந்த இயக்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அலற வைத்த ஐ.எஸ் இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி. ஈராக் மற்றும் சிரியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பலம் வாய்ந்த தீவிரவாத இயக்கமாக விளங்கிய ஐ.எஸ், செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அமெரிக்க கூட்டு படைகள் மற்றும் குர்து கிளர்ச்சிப்படைகளால் ஐ.எஸ் இயக்கம் வீழ்த்தப்பட்டது.
அந்த அமைப்பின் தலைவன் அல்பக்தாதி கடந்த வாரம் அமெரிக்க படைகள் தாக்குதலின் போது, தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டி வைத்திருந்த குண்டுகளை வெடிக்க வைத்து பலியானார்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை முதல்முறையாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் வெளியிட்டது. பக்தாதி பதுங்கி இருந்த வளாகத்தில் இருந்த பயங்கரவாதிகளை நோக்கி அமெரிக்க படைவீரர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சி வீடியோவில் உள்ளது. அமெரிக்க படையின் தாக்குதலால் நிலை குலைந்து போன பக்தாதி அந்த வளாகத்தில் உள்ள குகைப்பாதைக்குள் ஓட, அமெரிக்க படையில் இடம் பெற்றுள்ள நாய் துரத்த, அதன்பின்னர்தான் பாக்தாதி தனக்கு தானே முடிவை தேடி கொண்டார்.
அமெரிக்க படை நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து அந்த வளாகம் பெரிய பள்ளங்களுடன் வாகனங்கள் நிறுத்துமிடம் போல காட்சி அளிப்பதையும் வீடியோ காட்டுகிறது. இதுபற்றி அமெரிக்க மத்திய ராணுவ தளபதி ஜெனரல் கென்னத் மெக்கென்சி நிருபர்களிடம் பேசுகையில், பாக்தாதியுடன் குகையில் 3 குழந்தைகள் பலியானதாக வந்த தகவல் சரியானதல்ல, 2 குழந்தைகள் பலியாகி இருக்கின்றன என கூறினார்.
இந்த நிலையில், அல்பக்தாதி மரணத்தை ஐ.எஸ் இயக்கமும் உறுதி செய்துள்ளது. அந்த இயக்கத்தின் ஊடகமான அமாக்-கில் வெளியான செய்தியில் ஐ.எஸ் இயக்க தலைவர், மற்றும் செய்தி தொடர்பாளர் புனிதப்போரில் மரணமடைந்துள்ளனர். புதிய தலைவராக இப்ராஹிம் அல்-குரைஷி செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ISIS