ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள ராணுவ ஆலையில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் ராணுவ ஆலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், ஆலையின் மேற்கூரை சேதமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், ஒரு ஆளில்லா விமானத்தை வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும், மற்ற இரண்டு விமானங்கள் பாதுகாப்பு பொறிகளில் சிக்கி வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
இதேபோல் தப்ரிஸ், கராஜ், தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளிலும், வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததை அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதேநேரத்தில் தாக்குதல் நடத்தியது யார் என இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இந்த தாக்குதலின் பின்னணில் இஸ்ரேல் இருக்குமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவுகிறது. ஈரான் ஆணு ஆயுத திட்டங்களை தீவிரப்படுத்தி அமைதிக்கு மாறான பாதையில் செயல்படுவதாக இஸ்ரேல் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது. அதேபோல், இஸ்ரேலுக்கு ஒத்தக் கருத்தில் அமெரிக்காவும் ஈரானுடன் மோதல் போக்கை நீண்ட காலமாக கடைபிடித்து வருகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி... ஒரு டாலருக்கு ரூ.255 ஆக சரிவு
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறுகின்ற போர்களும், தற்போது நடைபெறும் ரஷ்யா-உக்ரைன் போரிலும் ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகள் எதிர் துருவங்களாக நின்று மோதி வருகின்றன. ரஷ்யாவுக்கு ஈரான் ட்ரோன்களை வழங்கி உதவிகளை செய்வதாகக் கூறப்படுகிறது. அதேவேளை அமெரிக்கா போரில் நேரடியாக பங்கேற்காவிட்டாலும் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதம், நிதியுதவிகளை செய்து போரில் மறைமுகமாக பங்கேற்கிறது. ரஷ்யாவுக்கு ஈரான் ட்ரோன் உதவிகளை செய்வதை அமெரிக்கா கண்டித்து ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. எனவே, ஈரான் மீதான இந்த ட்ரோன் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் அல்லது அமெரிக்கா இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.