இலங்கையில் பாலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? உளவுத்துறை எச்சரிக்கை!

இலங்கை குண்டு வெடிப்பு

கொழும்பு நகரில் பாலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக காவல் துறையின் உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கூடுதல் பாதுகாப்புப் படைகளை நியமிக்குமாறு காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கையின் கொழும்பு நகரில் பாலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 257 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கொழும்பு நகரில் பாலங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக காவல் துறையின் உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கூடுதல் பாதுகாப்புப் படைகளை நியமிக்குமாறு காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆறுகளில் கூடுதல் கப்பல்களை கண்காணிப்புக்கு நிறுத்துமாறு கடற்படை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாதிகளை கட்டுப்படுத்த சிறப்பு கட்டுப்பாட்டு அறையை ராணுவம் திறந்துள்ளது.

இந்நிலையில், மசூதிகளில் வெள்ளிக்கிழமையான நேற்று தொழுகை நடத்தப்பட்டது. இதையொட்டி, பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இஸ்லாமியர் ஒருவர், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை பாதிப்பு

இதனிடையே, நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்த சுற்றுலாத் துறை நிபுணர் சந்தனா அமரதாசா, குண்டுவெடிப்புத் தாக்குதலால் சுற்றுலாத் துறைக்கு 150 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறினார். இந்த மோசமான நிலையிலிருந்து விரைவில் மீண்டுவருவோம் என்று அமரதாசா நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 24 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இந்த ஆண்டில் 30 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதற்கேற்றபடி சூழ்நிலை இருந்துவந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

400 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டில் அதனைவிட அதிகரிக்க இலக்கு நிர்ணயித்திருந்தோம். தற்போது நடத்தப்பட்ட தாக்குதலால் 150 கோடி டாலர்கள் வரை குறையும்.

இது சுற்றுலாத் துறைக்கு மிகப்பெரும் இழப்பு. அடுத்த 3 மாதங்களுக்கு அனைத்தும் சிறப்பாக சென்றால், அனைத்து சர்வதேச நாடுகளும் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ளும் என்று நம்புகிறோம். ஆசியாவில் இதற்கு முன்னதாக தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும், மத்திய கிழக்கு நாடுகளும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன.

இலங்கையில் சுற்றுலாத் துறை சிறப்பான முறையில் செயல்படுகிறது. எனவே, விரைவில் மீண்டு வருவோம்.

இதனிடையே, தேவாலயங்கள் நாளை திறக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் எச்சரிக்கையால் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published: