திருமண சடங்குகள் என்பது ஆசியாவில் பல்வேறு வினோத நடைமுறைகளை கொண்டதாகும். குறிப்பாக, பழங்குடி மக்கள் இடையே திருமணம் சார்ந்த சடங்குகள் பாரம்பரியம் மிக்கதாக இருந்தாலும், தனித்துவம் வாய்ந்ததாகும் சில நேரம் நவீன சமூகத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதாகவும் காணப்படுகின்றன.
இவ்வாறு தான் இந்தோனேசியா நாட்டின் ஒரு பழங்குடி இனக் குழு திருமணம் ஆன தம்பதிகளை மூன்று நாள்கள் கழிப்பறை பயன்படுத்தக் கூடாது என்ற விசித்திர உத்தரவை பிறப்பித்து அதை இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் பின்பற்றி வருகிறது.
இந்தோனேசியாவின் வடகிழக்கு பகுதியில் போர்னியோவில் டிடோங் என்ற பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இது மலேசியாவுடன் எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகும். இந்த டிடோங் பழங்குடி மக்கள் பெரும்பாலும் விவசாயிகள். இந்த பழங்குடி சமூகத்தில் புதிதாக மணம் முடித்த தம்பதி மூன்று நாள்களுக்கு கழிப்பறையை பயன்படுத்தக் கூடாது என்ற விசித்திர கட்டுப்பாடு இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.
தம்பதி இருவரும் திருமணம் ஆனவுடன் மூன்று நாள்களுக்கு ஒரு தனி அறையில் பூட்டி தங்க வைக்கப்படுவார்கள். இவர்களை கண்காணிக்கவும் ஒரு தனிக்குழுவும் எப்போதும் விழிப்பில் இருக்கும். அத்துடன் இவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு குறைந்த அளவிலான உணவு மற்றும் நீர் மட்டுமே வழங்கப்படும். ஆத்திர அவசரத்துக்கு கூட கழிவறை செல்ல முடியாத தம்பதி எப்பாடு பட்டாவது இந்த 3 நாள் சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
இதையும் படிங்க: 'டோட்டல் நான்சென்ஸ்' - குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து எலான் மஸ்க் பரபரப்பு கருத்து
இந்த சடங்கை வெற்றிகரமாக தாண்டி வரும் தம்பதி, தங்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியுடன், நீண்ட காலம் அனைத்து பேறுகளையும் பெற்ற நிலைத்து வாழும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அதேவேளை, இந்த சடங்கில் தோல்வி அடையும் தம்பதிக்கு துரதிஷ்டம் வந்து சேரும் என்பது இவர்களின் நம்பிக்கை. இந்த காலத்திலும் இந்த சடங்கை இந்த பழங்குடி மக்கள் பின்பற்றி வருவது நாகரீக சமூகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.