இந்தோனேஷியாவில் கடலில் விழுந்த விமானத்தின் பாகங்களும் பயணிகள் உடல் பாகங்களும் கண்டெடுப்பு

இந்தோனேசியா விமான விபத்து

இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களும், பயணிகளின் உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தா-விலிருந்து மேற்கு கலிமன்டன் மாகாணத்தில் உள்ள பொன்டியானக் பகுதியை நோக்கி சிரிவிஜயா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் புறப்பட்டது. அதில், 10 சிறுவர், சிறுமியர் உள்பட 50 பயணிகளும், 12 பணியாளர்களும் இருந்தனர். விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 4 நிமிடங்களில் ரேடாரின் கண்காணிப்பிலிருந்து விலகிய விமானம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

  10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து ஒரே நிமிடத்தில் கடலில் விழுந்ததாக அதை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது, மிகப்பெரும் வெடிச் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. விமான கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்புகொண்டு 29 ஆயிரம் அடி உயரத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, விபத்து ஏற்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

  விமானத்தை தேடும் பணியில் கடற்படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்களுடன் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதேபோல, 4 விமானங்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டன.

  அப்போது, இரு இடங்களிலிருந்து சமிக்ஞைகள் கிடைத்தன. அது, விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து வந்ததாக இருக்கலாம் என்ற அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஜாவா கடல் பகுதியில் 75 அடி ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில், விமானத்தின் பாகங்கள், பயணிகளின் உடல் பாகங்கள், ஆடைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடல் பாகங்களை அடையாளம் காண்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாக ஜகார்த்தா காவல் துறை செய்தித் தொடர்பாளர் யுஸ்ரி யூனுஸ் கூறினார்.

  பயணிகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்வதற்காக விமான நிலையத்தில் உறவினர்கள் குவிந்தனர். விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணங்களை கண்டறிய முடியவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

  போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானம், நல்ல நிலையிலேயே இருந்ததாக விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃபர்சன் இர்பன் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: