உக்ரைன் நாட்டில் ஏற்பட்டு இருக்கும் போர் காரணமாக அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் பதுங்கு குழிகளில் பதுங்கி தவித்து வருகின்றனர். பெற்ற பிள்ளைகள் தண்ணீர், உணவின்றி தவிப்பதை நினைத்து, அவர்களின் பெற்றோர் வேதனையில் வாடி வருகின்றனர்.
உக்ரைனில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான செலவு குறைவு என்பதால் இந்திய மாணவர்கள் பலர் உக்ரைனுக்கு சென்று மருத்துவம் படித்து வருகின்றனர். உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்ட போதே அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய்நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த தொடங்கும் போதே, ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கி விட்டது. இதனால் மாணவர்கள் ரஷ்யாவின் குண்டு மழைக்கு பயந்து தற்போது பதுங்கு குழியில் பரிதவிக்கின்றனர்.
இதில் நூற்றுக்கணக்கான தமிழக மாணவர்களும் அடக்கம். சென்னையைச் சேர்ந்த ஜெனிஃபர், ஜெய் கிஷோர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இவர்களது நண்பர்கள் 5 பேர் என உக்ரைன் நாட்டில் ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள கார்கிவ் நகரின் அப்லாஸ்ட் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவும், கடந்த இரு தினங்களாக அடுக்குமாடி குடியிருப்பின் அண்டர் கிரவுண்டில் இருட்டில் வசித்து வரும் தங்களுக்கு உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
உயிரை துச்சமென கருதி சரணடைய மறுத்த 13 உக்ரைன் வீரர்கள்.. ரஷ்ய படையினரால் சுட்டுக் கொலை!
கார்கிவில் படித்துவரும் மதுரையை சேர்ந்த ராஜீவ் என்ற மாணவர் குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க அடுக்குாமடி குடியிருப்பை காலி செய்துவிட்டு மெட்ரோ நிலையங்களில் பதுங்கி இருக்கிறார். தப்பிக்கவும் வழியில்லாமல் உணவும் கிடைக்காமல் தவித்து வரும் இவர் இந்திய அரசு தங்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனில் தங்கியுள்ள திருப்பூர் முத்தன்னம்பாளையம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் அரவிந்த். முதலாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். கார்க்கிவ் நகரில் பதுங்குகுழியில் தங்கியிருக்கும் அவல நிலை குறித்து அவர் விளக்குவது அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.
சோவியத் ஒன்றியத்தின் இருப்பு முடிவுக்கு வந்தது எப்படி?
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. பெற்ற பிள்ளைகள்,ஹங்கேரி எல்லைக்கு வெகு தொலைவில் பதுங்கு குழியில் பரிதவிப்பதை நினைத்து வேதனையில் இருக்கும் பெற்றோர்களின் கண்ணீரை துடைக்க மத்திய - மாநில அரசுகள் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.