Home /News /international /

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இந்திய தூதரகம்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இந்திய தூதரகம்

உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

உளவுத் தகவலின் அடிப்படையில் கார்கிவ், சுமி மற்றும் கீவ் ஆகிய நகரங்களில் மிகக்கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. - இந்திய தூதரகம்

போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இதனை அங்கிருப்பவர்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய தூதரகம் தற்போது வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

எங்களுக்கு கிடைத்துள்ள உளவுத் தகவலின் அடிப்படையில் கார்கிவ், சுமி மற்றும் கீவ் ஆகிய நகரங்களில் மிகக்கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. எனவே இந்த நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் ஊரடங்கு ஏற்படுத்தப்பட்ட நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். அவர்கள், ஊரடங்கு நீக்கப்படும் வரை மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்படும் வரையில் வெளியே வரக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகம் தரப்பில் இருந்து முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'ரொமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிக எண்ணிக்கையில் உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளோம்.

இதையும் படிங்க - உக்ரைனில் மேலும் 2 முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா!

உக்ரைனில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அவை நீக்கப்பட்ட இடங்களில், அல்லது நீக்கப்படும்போது அங்கிருக்கும் இந்தியர்கள் ரயில் சேவையை பயன்படுத்தி உக்ரைனின் மேற்கு பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சில இடங்களில் வெளியேறுவதற்காக இலவச ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. இதுபற்றிய விபரங்களை www.uz.gov.ua என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தனி நபர்களாக இருக்கும் இந்தியர்கள் குழுக்களாக இணைந்து செயல்பட வேண்டும். இந்தியர்களை அடையாளம் கண்டு அவர்களையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பெண்கள், குழந்தைகள், முதியோருக்கு முன்னுரிமை கொடுங்கள்.

இதையும் படிங்க - ''உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை'' : உதவிக்கரம் நீட்டும் போலந்து

உக்ரைனில் நடக்கும் சம்பவங்களை இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக கிழக்கு உக்ரைன் பகுதியில் நடக்கும் போர் குறித்த விபரங்களை தூதரகம் பெற்று வருகிறது.

இந்தியர்கள் பதற்றப்பட வேண்டாம். தேவையான பொருட்களை மட்டும் உங்களுடன் எடுத்துக் கொள்ளுங்கள். குளிர் அதிகம் என்பதால், அதற்கேற்ற ஆடை மற்றும் கம்பளியை வைத்துக் கொள்ளுங்கள்.

உக்ரைனை விட்டு வெளியேற முயற்சிப்பது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று உங்களில் சிலர் கருதலாம். அவ்வாறு தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர விரும்பாதவர்கள் சற்று பொறுமை காக்கவும். உக்ரைனிலேயே இருப்பவர்களுக்காக இந்திய தூதரகம் இன்னொரு திட்டத்தை வகுத்து வருகிறது. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி