கேரளாவில் உள்ள ஒரு கிராமப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு முடித்துவிட்டு தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த , ஜூலி ஏ மேத்யூ இரண்டாவது முறையாக டெக்ஸாஸின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
ஜூலி மற்றும் அவரது சகோதரர் ஜான்சன் அவர்களின் பெற்றோர் தாமஸ் டேனியல் மற்றும் சூசம்மா கேரளாவின் திருவல்லாவிலிருந்து குடிபெயர்ந்து பிலடெல்பியாவில் வாழ்ந்து வந்துள்ளனர். தாமஸ் ஒரு மருந்தாளுனர் மற்றும் சூசம்மா அமெரிக்காவில் செவிலியராக பணியாற்றியுள்ளார்.
ஜூலி பிலடெல்பியாவில் தனது உயர்நிலைப் பள்ளியை முடித்தார். அப்போது அவரது தந்தை தனது தொழிலில் எதிர்கொண்ட சில சட்டச் சிக்கல்கள், சட்டம் படிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய முதல் சிந்தனையை அவர் மனதில் விதைத்தது. பின்னர் டெலாவேர் சட்டப் பள்ளியில் தனது ஜூரிஸ் முனைவர் பட்டம் பெற்றார்.
அதை அடுத்து நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்திலும் படித்தார். அவரது கல்வி ஆண்டுகளில், அவர் பென் ஸ்டேட் அபிங்டனில் உள்ள மாணவர் அரசாங்க சங்கத்தின் தலைவராக இருந்தார் மற்றும் பென்சில்வேனியா பிரதிநிதிகள் சபையிலிருந்து தலைமைக்கான பரிந்துரையைப் பெற்றார்.
பின்னர் 15 வருடங்கள் திருமதி மேத்யூ அமெரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள ஒரு நீதிபதியின் பெஞ்சில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கப் பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்தார்.நான்கு ஆண்டுகள் தனது பணியை செவ்வனே செய்த மேத்யூ தொடர்ந்து இரண்டாவது முறையாக அமெரிக்காவின் டெக்சாஸில் ஃபோர்ட் பெண்ட் கவுண்டி நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து கடந்த திங்கள்கிழமை கேரளா மாநிலத்தில் உள்ள தனது கணவரின் கிராமத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதியாக பதவியேற்றார்."இந்த முறை என் கணவர் வீட்டிலிருந்து பதவியேற்க வேண்டும் என்பது எனது விருப்பம். இல்லையெனில் எனது மாமியார் விழாவில் பங்கேற்க முடியாது. அவர்களும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணத்தை நேரில் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." அவர் கூறினார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் முதல்முறையாக நீதிபதியாக பதவியேற்றபோது, அந்த விழாவைக் கண்டு ஆசிர்வதிக்க அவரது பெற்றோர் அங்கு வந்ததாக மேத்யூ கூறினார். ஜூலி ஏ மேத்யூவிற்கும் காசர்கோடு பீமநடியைச் சேர்ந்த ஜிம்மி மேத்யூ என்பவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.