HOME»NEWS»INTERNATIONAL»indian american arrested for living in chicago airport for 3 months due to fear of covid 19 vin ghta

அமெரிக்காவில் கொரோனாவுக்கு பயந்து 3 மாதம் விமான நிலையத்தில் தங்கியிருந்த சீக்கியர் கைது!

விமான நிலையத்தின் பாதுகாப்பு இதன்மூலம் வெட்டவெளிச்சமாகியிருப்பதாக தெரிவித்த நீதிபதி, விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு பயந்து 3 மாதம் விமான நிலையத்தில் தங்கியிருந்த சீக்கியர் கைது!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated :
  • Share this:

கொரோனவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில்  3 மாதம் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவையும் ஆட்டிப்படைத்தது. இதனால், ஏராளமானோர் கொரோனாவுக்கு பயந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இந்திய வம்சாவளியரான ஆதித்ய சிங் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி சிகாகோ நகரில் இருக்கும் ஓகாரே விமானநிலையத்துக்கு (O'Hare International Airport ) சென்ற அவர், கொரோனாவுக்கு பயந்து அங்கேயே தங்கியுள்ளார். விமான நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்த அவரை, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். 

அப்போது, 3 மாதங்களுக்கு முன்பு விமான நிலைய அதிகாரியின் தொலைந்துபோன ஐடி கார்டை ஆதித்யா சிங் காண்பித்துள்ளார்.இதனை கண்டுபிடித்த அதிகாரிகள், ஆதித்ய சிங்கை கைது செய்து பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், தடை செய்யப்பட்ட பகுதியில் தங்கியிருத்தல், அதிகாரிகளின் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆதித்யா சிங் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆதித்ய சிங் மருத்துவ மேலாண்மை படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருந்தது தெரியவந்தது. 



வேலையில்லாமல் இருந்த அவர் கொரோனாவுக்கு பயந்து கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி வரை விமான நிலையத்தில் தங்கியிருந்ததும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை கேட்டு வியப்படைந்த நீதிபதி சூசானா ஆர்டிஸ் (Susana Ortiz), 3 மாதங்களாக ஒரு பன்னாட்டு விமான நிலையத்தில் ஒருவர் எப்படி இருந்தார் என விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். 

Also read... அமெரிக்காவில் ட்ரெண்ட் ஆகும் கமலா ஹாரிஸின் 'Future is Female' சாக்ஸ்!

மேலும், விமான நிலையத்தின் பாதுகாப்பு இதன்மூலம் வெட்டவெளிச்சமாகியிருப்பதாக தெரிவித்த நீதிபதி, விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.குற்றப்பிண்ணனி இல்லை என்றாலும், விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் தங்கியிருந்ததால் ஆதித்யா சிங்கை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். ஜனவரி 27 ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையின்போது 1000 அமெரிக்க டாலர் அபராதம் கட்டினால், பெயிலுக்கு உத்தரவிடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். 

விசாரணைக்குப் பின்னர் ஆதித்யா சிங்கை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களுள் ஒன்றான ஓகார பன்னாட்டு விமானநிலையத்தில் 3 மாதங்களுக்கும் மேலாக ஒருவர் தங்கயிருந்தது பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: