முகப்பு /செய்தி /உலகம் / காபுல் விமான நிலையம் அருகே மீண்டும் சக்தி வாய்ந்த ராக்கெட் தாக்குதல்!

காபுல் விமான நிலையம் அருகே மீண்டும் சக்தி வாய்ந்த ராக்கெட் தாக்குதல்!

kabul

kabul

காபுல் விமான நிலையம் அருகே உள்ள வீடு ஒன்றின் மீது ராக்கெட் தாக்குதல் நடந்திருக்கிறது. குழந்தை உட்பட இருவர் பலி என தகவல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காபுல் விமான நிலையம் அருகே சில நாட்களுக்கு முன் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலில் குழந்தை உட்பட இருவர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு உலக நாடுகளின் கவனம் முழுதும் தலைநகர் காபுல் மீது தான் இருக்கிறது. அங்குள்ள நிலைமை மிகவும் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது. தாலிபான்களுக்கு பயந்து ஆப்கனை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானிஸ்தானியர்கள் காபுல் விமான நிலையம் எதிரே ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கின்றனர். தற்போதைய நிலையில் ஆப்கனை விட்டு வெளியேற ஒரே வழி காபுலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையம் மட்டுமே என்பதால் ஏதேனும் ஒரு மீட்பு விமானத்தை பிடித்து ஆப்கனில் இருந்து ஏதேனும் ஒரு நாட்டுக்கு தப்ப வேண்டும் என காத்திருக்கிறார்கள்.

அமெரிக்கர்கள் உட்பட காபுலில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவரை மீட்பதற்கான இறுதிக் கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காபுல் விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலை ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் ஆப்கானிஸ்தானியர்கள் 169 பேரும், அமெரிக்க படையைச் சேர்ந்த 13 பேரும் உயிரிழந்தனர். இரண்டு பத்ரிகையாளர்களும், இரண்டு தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களும் உயிரிழந்தவர்களில் அடக்கம்.

இதனிடையே காபுல் விமான நிலையம் அருகே மேலும் ஒரு ராக்கெட் தாக்குதல் இன்று மாலை (ஆகஸ்ட் 29) அரங்கேறியிருக்கிறது. காபுல் விமான நிலையம் அருகே உள்ள வீடு ஒன்றின் மீது ராக்கெட் தாக்குதல் நடந்திருக்கிறது. இதில் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. காபுல் விமான நிலையத்தில் இருக்கும் அமெரிக்கர்களை குறிவைத்து இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பினர் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காபுல் விமான நிலையத்தில் நடைபெற்ற முதல் தாக்குதலுக்கு பின்னர் அடுத்த 24 மணிநேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்குள் மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் கிடைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது குறிப்பிடத்தக்கது,

First published:

Tags: ISIS, News On Instagram