ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில் இந்த பிரச்னைக்கு உள்ள தீர்வு குறித்து ஐநாவில் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
1982-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக ஐநா பொதுச் சபை அவசரமாக நேற்று கூடியது. இதில் உக்ரைன் - ரஷ்யா பிரச்னை குறித்து பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
கூட்டத்தில் பேசிய ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ், 'உக்ரைனை ஐநா கைவிடாது. அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று ரஷ்யா கூறியிருப்பதை ஏற்க முடியாது. விரைவில் இந்தப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
ஐநா அவசர கூட்டத்தில் ஐநாவுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி பேசியதாவது-
முதலில் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்து வருகிறது. அங்கிருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க -
'உக்ரைனைக் கைவிட மாட்டோம்' : ஐநா அவசர கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேச்சு
உக்ரைனில் நடந்து வரும் தாக்குதல் குறித்து இந்தியா மிகுந்த கவலை கொள்கிறது. உடனடியாக போர் நிறுத்தம் அங்கு ஏற்பட வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான பகைமை முடிவுக்கு வர வேண்டும்.
தூதரக முறையில் பேச்சுவார்த்தை நடத்திதான் உக்ரைன் - ரஷ்யா பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த முடியும். இதைத் தவிர்த்து வேறு எந்த வழியும் கிடையாது என்பதில் இந்திய அரசு முழு நம்பிக்கை கொண்டுள்ளது.
இதையும் படிங்க -
நேட்டோ, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்: ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கான தொடக்கம் என்ன?
உக்ரைனில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கு முன்னுரிமை அளித்து செயல்படுகிறோம். எல்லைகளை எங்கள் நாட்டவர் கடப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனை உக்ரைனின் எல்லை நாடுகளும், உக்ரைன் அரசும் சரி செய்து தர வேண்டும்.
இந்தியர்களை மீட்பதில் உக்ரைனும், அதன் அண்டை நாடுகளும் எங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.