வங்கதேசத்தின் கொமில்லா நகரில் நடைபெற்ற துர்கா பூஜை விழாவின்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாக வெளியான வீடியோவைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற துர்கா பூஜை பந்தல்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்துகளில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான துர்கா பூஜை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படும். மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜையையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகள் பிரசித்திப் பெற்றதாகும். அந்தவகையில் மேற்கு வங்கம் மாநிலத்தை ஒட்டிய வங்க தேச நாட்டில் உள்ள இந்துக்களால் துர்கா பூஜை நேற்று கொண்டாடப்பட்டது.
அப்போது, கொமில்லா நகரில் நடைபெற்ற துர்கா பூஜை விழாவின்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதை தொடர்ந்து அங்கு தாக்குதல் நடைபெற்றது. மேலும் இது வகுப்புவாத மோதலாக மாறி பிற பகுதிகளிலும் துர்கா பூஜை விழா நடைபெற்ற இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
வன்முறையை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த வங்கதேசத்தின் 22 மாவட்டங்களில் பாராமிலிட்டரி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து மதத்தினருக்கு துர்கா பூஜை வாழ்த்தின் போது வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். வங்கதேசம் இன நல்லிணக்கத்தின் பூமி. இங்கே, அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்வார்கள் மற்றும் தங்கள் சொந்த மதத்தை பின்பற்றலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கடனில் தத்தளிக்கும் டாப் 10 நாடுகளில் இடம்பிடித்த பாகிஸ்தான் - உலக வங்கி தகவல்
வங்கதேசத்தின் இந்து மக்களுக்கு எதிரான இந்த வன்முறைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், மதக் கூட்டங்களில் நடைபெற்ற தாக்குதல் உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. நிலைமையை கட்டுப்படுத்துவதை உறுதி செய்வதற்காக வங்கதேச அரசின் உடனடி நடவடிக்கையை இந்தியா கவனித்துள்ளது. டாக்காவில் உள்ள நமது உயர் ஆணையங்கள் மற்றும் வங்கதேசத்தில் உள்ள நமது தூதரகங்கள் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangladesh, Durga Puja