ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு நேற்று காலை சென்றடைந்த பிரதமருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், நட்சத்திர விடுதிக்கு சென்றபோது, இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற மோடியை, அந்நாட்டுப் பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஸ் வரவேற்றார். மேலும், மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருதரப்பு நல்லுறவு, உக்ரைன் விவகாரம், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இருதரப்பு தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பசுமை மற்றும் நீடித்த எரிசக்திக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், நரேந்திர மோடியும், ஓலஃப் ஸ்கால்ஸும் கையெழுத்திட்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்று தெரிவித்தார். அனைவருமே இழப்பை சந்திப்பார்கள் என்பதால், அமைதி மற்றும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
அண்மைக்கால புவிஅரசியல் மாற்றங்களைப் பார்க்கும்போது, உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெளிவாவதாகவும் அவர் கூறினார். இதேபோல, போரை நிறுத்த ரஷ்ய அதிபர் முன்வர வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
இருதரப்பு தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான 6வது ஆலோசனைக் கூட்டத்துக்கு இரு தலைவர்களும் தலைமை வகித்தனர். அப்போது, ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு ஜெர்மனி பிரதமர் அழைப்பு விடுத்தார்.
பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே மேற்கொள்ளப்பட உள்ள தாராள வர்த்தக ஒப்பந்தம், முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம், புவிசார் குறியீடு குறித்த ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : எண்ணூரில் நிலக்கரி கொண்டு செல்லும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
இருதரப்பு ஆலோசனைக்குப் பிறகு, இரு நாடுகளையும் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் இரு பிரதமர்களும் கலந்துரையாடினர். மேலும், பெர்லினில் இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாடுவதற்காக பிரதமர் மோடி வந்தார். நிகழ்ச்சி நடைபெற்ற திரையரங்கு வளாகத்தில் மத்தளத்தை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விழா மேடைக்கு மோடி வந்தபோது, 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடி வெற்றிபெற வேண்டும் என்று இந்திய சமூகத்தினர் முழக்கம் எழுப்பினர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பாரத அன்னையின் குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Germany, Narendra Modi, PM Modi