உக்ரைனில் ரஷ்யப் படைகள் ஊடுருவி போர் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன. உக்ரைனுக்குள் ஊடுருவினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிபருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. இதனால், எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவினால், கடும் நடவடிக்கைகளை எடுப்போம் என்று பைடன் எச்சரிக்கை விடுத்தார். இந்த சூழலில் கூடுதலாக 3 ஆயிரம் வீரர்களை போலந்துக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
மேலும், உக்ரைனிலிருந்து தங்களது நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், பாதிப்பு ஏற்பட்டால் விமானம் மற்றும் ரயில் மூலம் மீட்க முடியாது என்றும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தூதரக நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும் அறிவித்துள்ளது.
Also read: "இது காதலிக்கும் வயசல்ல" - பள்ளி மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை
இதனிடையே, பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் படைகள் குவிக்கப்படுவது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
போர்ப் பதற்றம் காரணமாக, உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து தங்களது தூதர்கள் முற்றிலும் வெளியேறி வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். இதேபோல, கனடாவும் தங்களது தூதரக அலுவலகத்தை தலைநகர் கீவிலிருந்து லிவிவுக்கு மாற்றியுள்ளது.
இஸ்ரேலிய நாட்டவர்கள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் பிரதமர் நாஃப்தாலி பென்னெட் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், உக்ரைனிலிருந்து குடிமக்களை அழைத்து வருவதற்காக விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக கூறினார்.
Also read: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம்
இதேபோல, உக்ரைனில் உள்ள தங்களது நாட்டவர்களை வெளியேறுமாறு இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், நியூசிலாந்து நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. அதேநேரம், உக்ரைனுக்குள் ஊடுருவும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், உக்ரைனின் மூன்று பகுதிகளையும் சுற்றிவளைத்து பெலாரஸுக்கு கூட்டுப்பயிற்சிக்காக தங்களது வீரர்களை அனுப்பிவைத்துள்ளது ரஷ்யா.
மேலும், ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்கக் கூடாது என்றும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோ (NATO) படைகள் வெளியேற வேண்டும் என்றும் தாங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.