Home /News /international /

சீனாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

சீனாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

Corona Virus in China : ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஜிலின் நகரில் தினசரி தொற்று எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ள நிலையில், அந்நகர மேயர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று ஜுடாய் நகர மேயரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று காரணமாக, சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.

  அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,393 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், தினசரி தொற்று எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்றாளர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறியே இல்லாததால் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

  தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் தலைநகர் பெய்ஜிங்கில் நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டும் பெய்ஜிங்கில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். ஷாங்காய் நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வடகிழக்கு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் வடகொரியா எல்லையில் உள்ள ஹுன்ஷுன் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஜிலின் நகரில் தினசரி தொற்று எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ள நிலையில், அந்நகர மேயர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொற்று பரவலை கட்டுக்கள் கொண்டு வரும் விதமாக 6-வது முறையாக பெரிய அளவில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

  ஜுலின் நகரின் அண்டை நகரான சாங்சனில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காட்சி மையமானது, ஆயிரத்து 500 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக செயல்பட்டதாக அந்நகர சுகாதார ஆணையர் பதவி நீக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இதேபோன்று ஜுடாய் நகர மேயரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  Read More : அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

  தொழில்நுட்ப மையமாக திகழும் சென்சென் பிராந்தியத்தில் உள்ள 9 மாவட்டங்களில் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும், உள்ளரங்குகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்கள் திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குயிங்டோ நகரில் 4 மருத்துவமனைகள் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

  Must Read : ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளை விதிப்பதன் மூலம் உக்ரைன் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர முடியாது : துருக்கி

  இந்நிலையில், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தொழில்நுட்ப துறையின் தலைமையிடமாக விளங்கும் ஷென்சென் நகரில், தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அங்கு, அத்தியாவசிய பணிகள் தவிர்த்து எஞ்சிய நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: China, CoronaVirus

  அடுத்த செய்தி