வரலாற்றில் முதல்முறையாக அண்டார்டிகாவின் பனிக்கட்டி மீது கமர்ஷியல் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலகின் துருவப் பகுதியான அண்டார்டிகா முற்றிலும் பனிக்கட்டிகளால் நிறைந்த ஒரு கண்டம் ஆகும். இங்கு நிலவும் உறைய வைக்கும் குளிரில் தாக்குப்பிடித்து உயிர்வாழ்வது அத்தனை சுலபமான காரியம் கிடையாது. எங்கு திரும்பினும் வெள்ளை பிரதேசமாகவே காட்சியளிக்கும். இருப்பினும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கு கூடாரங்கள் அமைத்து விஷேச உபகரணங்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள், உணவுகளுடன் அவ்வப்போது சிறிய ரக விமானங்கள் மூலம் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அண்டார்டிகாவில் விமான நிலையம் என ஏதும் கிடையாது. அங்குள்ள பனிக்கட்டி மீது விமானத்தை தரையிறக்குவதும் அவ்வளவு சுலபம் அல்ல. வழுவழுப்பான தரையாக இருக்கும் என்பதால் எடை கூடுதலான விமானங்கள் தரையிறங்கினால் அது வழுக்கிச் சென்று கவிழ்ந்துவிடக் கூடும்.
நிலைமை இப்படியிருக்க 190 டன் எடை கொண்ட பிரம்மாண்டமான ஏர்பஸ் ஏ340 ரக விமானத்தை அண்டார்டிகாவில் தரையிறக்கி விமானிகள் சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் அண்டார்டிகாவின் சுற்றுலா கதவுகள் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் இருந்து கடந்த நவம்பர் 2ஆம் தேதியன்று ஹை ஃபிளை விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ340 ரக விமானம் இந்த வரலாற்று பயணத்தை தொடங்கியது. அங்கிருந்து 2500 நாட்டிக்கல் மைல் (4,630கிமீ) தொலைவில் உள்ள அண்டார்டிகாவுக்கு அந்த விமானம் சென்றது. அண்டார்டிகாவை அடைந்த போது அந்த விமானத்தின் தலைமை விமானி கேப்டன் கார்லோஸ் மிர்புரி தலைமையிலான குழுவினர் காக்பிட் அறையில் பரபரப்படைந்தனர். சில விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் அந்த விமானத்தை மிகவும் லாவகமாக கேப்டன் இயக்கியதால் எந்தவித பாதிப்பும், வழுக்கிச் செல்லவும் இல்லாமல் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் விமானி. இதனையடுத்து வரலாற்று சாதனையை படைத்துவிட்டதாக காக்பிட் அறையில் இருந்தவர்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
பனிக்கட்டிகளில் இருந்து வரக்கூடிய ஒளியை கட்டுப்படுத்த விஷேச கண்ணாடிகளையும் விமானிகள் அணிந்திருந்தனர். இது குறித்து தலைமை விமானி கார்லோஸ் மிர்புரி கூறுகையில், சுற்றிலும் வெண்மையாக இருந்ததால் உயரத்தை கணக்கிடுவது மிகவும் சவாலாக இருந்தது. இருப்பினும் லாவகமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கியதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை செய்துபார்த்திராத செயலான இதனை செய்து முடிக்கக் கூடிய செயலாக கேப்டன் மிர்புரி குழுவினர் மாற்றியிருக்கின்றனர். இந்த வரலாற்று நிகழ்வின் மூலம் இனி அண்டார்டிகாவில் சுற்றுலா கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. வருங்காலத்தில் சிறிய அளவிலான சுற்றுலா குழுவினரை அழைத்துச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் தரையிறங்கிய ஏர்பஸ் விமானம் 3 மணி நேரத்தில் சரக்குகளை இறக்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Antarctica