பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி பெரும்பான்மையை பெறுவதற்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பாகிஸ்தானில் ஆட்சியமைத்து வந்தது. அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சிலர் ஆதரவை திரும்ப பெற்றனர். இதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இம்ரான் கானின் பரிந்துரையின்பேரில் நாடாளுமன்றத்தை சபாநாயகர் கலைத்தார்.
சபாநாயகர் நாடாளுமன்றத்தை கலைத்ததை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று நேற்று முன்தினம் உத்தரவு வெளியானது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த நேற்று நாடாளுமன்றம் கூடியது. கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவந்த எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப்க்கு எதிராக, ஆளுங்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு இடையூறு செய்தனா். இதனால், அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க - இலங்கை நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சி எச்சரிக்கை!
இதற்கிடையே, பிரதமா் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இரவில் நடைபெற்றது. அதில், பிரதமா் பதவியை இம்ரான் கான் ராஜிநாமா செய்ய மாட்டாா் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவை மீண்டும் கூடியது. அப்போது அவைத் தலைவா் ஆசாத் கைஸரும், துணைத் தலைவா் காசிம் சுரியும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தனா். இதையடுத்து, எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)-ஐ சோ்ந்த அயாஷ் சாதிக் அவைக்கு தலைமை வகித்து வாக்கெடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா்.
342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் தீா்மானம் வெற்றி பெற 172 வாக்குகள் தேவை என்ற நிலையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 174 போ் வாக்களித்ததாக தற்காலிக அவைத் தலைவா் அறிவித்தாா். இதையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயருக்கு ஆளானார் இம்ரான் கான். நாட்டின் புதிய பிரதமர் யார் நாடாளுமன்றம் கூடும்போது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புதிய பிரதமராக எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் நியமிக்கப்படுவாா் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.