பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் யூ - டியூப் பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுனைத் அக்ரம் என்பவர் நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொண்டு பேசினார்.
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த இம்ரான் கான் பிரிட்டன் நாட்டில் வாழ்ந்த தனது ஆரம்ப கால வாழ்க்கை குறித்து பேசினார். அதில் அவர், ‘பிரிட்டன் நாட்டில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஒருபோதும் பிரிட்டனை எனது சொந்த வீடாக கருதியதில்லை. நான் என்றுமே முதலில் பாகிஸ்தானிதான். ஒரு கழுதை உடலில் கோடுகள் போட்டுக்கொள்வதன் மூலம் வரிக்குதிரை ஆக முடியாது. கழுதை எப்போதும் கழுதையாகத் தான் இருக்கும்’ எனப் பேசினார்.
தன்னை கழுதையுடன் ஒப்பிட்டுக் கொண்டு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேசிய இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக தொடங்கியது. வீடியோ காட்சியை பகிர்ந்து நெட்டிசன்கள் பலரும் இம்ரானை கலாய்த்து தள்ளியுள்ளனர். இம்ரானின் நேர்மைக்கு பாராட்டுக்கள், ஒருவழியாக இவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார், இப்படி பட்ட நபர்தான் இத்தனை நாள் பாகிஸ்தானை ஆட்சி செய்தாரா என விதவிதமான கமெண்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து வெளியேற்றின. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி வைத்து ஷெபாஸ் ஷெரிப்பை புதிய பிரதமராக தேர்வு செய்தன.
இதையும் படிங்க:
உலகின் மிக உயரமான நாய் இது தான் - கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது...
அமெரிக்காவின் சதி வேலை காரணமாகவே தான் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இம்ரான் கான் புகார் தெரிவித்தார். மக்களிடம் நேரடியாக சென்று நீதி கேட்டு மீண்டும் தனது ஆட்சியை நிறுவுவேன் என நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் இம்ரான் கான்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.