பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அரசுக்கு எச்சரித்துள்ளார். இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் கட்சியின் தேசிய மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவராக இம்ரான் கானே மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியின் துணை தலைவராக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் கட்சி தொண்டர்களிடம் பேசிய இம்ரான் கான், தற்போதைய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் ஒரு காரியமும் செய்ய மாட்டார்கள். இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் ஊழல் பணத்தை பதுக்கி வைத்துள்ளார். எனவே, அமெரிக்காவுக்கு அச்சப்பட்டுக் கொண்டே அவர்கள் இறுதி வரை செயல்படுவார்கள்.
எனவே, இவர்களிடம் இருந்து பாகிஸ்தான் மக்களுக்கு முழு விடுதலை வாங்கித் தர நாம் போராட வேண்டும். இன்னும் சில நாள்களில் பாகிஸ்தான் வரலாற்றில் காணாத போராட்டத்தை நாம் நடத்தவுள்ளோம். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். எனவே நாட்டைக் காக்க புனிதப் போரில் நாம் ஈடுபட வேண்டும். உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் பாகிஸ்தான் மூன்றாக உடைந்து போகும் ஆபத்து உள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருள்களின் விலை உச்சமடைந்து வருகிறது. ஆளும் அரசு ரஷ்யாவிடம் ஒப்பந்தம் போட்டு குறைந்த விலையில் பெட்ரோல் பெறலாம். எனது தலைமையிலான அரசு இந்த ஒப்பந்தத்திற்கு முன்னெடுப்பை மேற்கொண்டது. ஆனால், அந்நிய சத காரணமாக எனது அரசு கவிழ்க்கப்பட்டது என அமெரிக்காவை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க:
1000ஐ தாண்டிய மங்கிபாக்ஸ் பாதிப்பு - உலக நாடுகளை எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்துவந்த நிலையில், அவரது ஆதரவு எம்பிக்கள் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்து இம்ரான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து புதிய பிரதமராக பிரதான எதிர்க்கட்சிகள் ஷெபாஸ் ஷெரிப்பை தேர்வு செய்தது. இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் இளைய சகோதரர் ஆவார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.