அன்னிய சக்திகள் சீண்டினால் அவர்கள்  சீனப்பெருஞ்சுவரில் மோதி தகர்க்கப்படுவார்கள்: சீன அதிபர் ஜின்பிங் ஆவேசம்

ஜி ஜின்பிங்

அன்னிய சக்திகள் சீன மக்களை சீண்டினால் அவர்களை இரும்பு போன்ற சீனப் பெருஞ்சுவரில் மோதி தகர்த்து விடுவோம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

  • Share this:
    அன்னிய சக்திகள் சீன மக்களை சீண்டினால் அவர்களை இரும்பு போன்ற சீனப் பெருஞ்சுவரில் மோதி தகர்த்து விடுவோம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

    சீன கம்யூனிஸ்ட் கட்சி யின் 100வது ஆண்டு விழா, தலைநகர் பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் பிரமாண்டமாக நேற்று நடந்தது. இதில் பேசிய அதிபர் ஷி ஜின்பிங் சீன மக்களை அன்னிய சக்திகள் சீண்டினால், அடிபணிய வைக்க முயன்றால் சீனா தக்க பதிலடி கொடுக்கும் என்று பேசினார்.

    அன்னிய சக்திகள் சீனாவை அடக்கவோ, அடிபணிய வைக்கவோ முயன்றால், அதை மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்; தகுந்த பதிலடி கொடுப்போம், என, அந்நாட்டு அதிபர் ஜின்பிங், மறைமுகமாக அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
    சீன மக்கள், நாட்டின்இறையாண்மை, ஒருமைப் பாடு ஆகியவற்றை காப்பதில், அசாதாரண ஆற்றலுடன், திடமான மன உறுதி, வலிமையும் மிக்கவர்கள். அவர்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். தேசப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தேவையான ஆற்றல் நம்மிடம் உள்ளது. எனினும் நாட்டின் தற்காப்புக்காக ராணுவ பலத்தை மேலும் நவீனப்படுத்த வேண்டும்.

    சீனா, எந்தவொரு நாட்டையும் சீண்டியதில்லை. பிற நாட்டு மக்களை அடக்கவோ அல்லது அடிபணிய வைக்கவோ எண்ணியதில்லை. அதுபோல இனி எந்தக் காலத்திலும் சீனா நடந்து கொள்ளாது. அதேசமயம், சீன மக்கள், தங்களை அன்னிய சக்திகள் சீண்டவோ, அடிபணிய வைக்கவோ விடமாட்டார்கள்.அதுபோன்ற முயற்சி யில் யாராவது ஈடுபட்டால், அவர்களது தலை, 140 கோடி சீன மக்களால் உருவாக்கப்பட்ட இரும்பு போன்ற சீனப் பெருஞ்சுவரில் மோதி தகர்க்கப்படுவது உறுதி.

    தைவான், சீனாவைச் சேர்ந்தது. தைவான் சுதந்திரம் தொடர்பாக எடுக்கப்படும் எந்த முயற்சியையும் நாம் முறியடிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, தேசத்தை புதுப்பித்து, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிகழ்ச்சியில், சிறுவர், சிறுமியர் உட்பட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சமீப காலமாக கொரோனா விவகாரத்திலும் சரி சீனாவின் வர்த்தக ஆதிக்கத்துக்கு எதிராகவும் சரி, மேலும் தென் கிழக்கு சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் ஆகிய விவகாரங்களில்  சீனாவுக்கு எதிராக, அமெரிக்கா பல்வேறு நாடுகளை அணி திரட்டி வருகிறது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல், அன்னிய சக்திகள் என மறைமுகமாக ஜின்பிங் பேசியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published: