• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • Explainer : சீனா அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் ஜாக் மா - பின்னணி என்ன?

Explainer : சீனா அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் ஜாக் மா - பின்னணி என்ன?

ஜாக் மா

ஜாக் மா

அலிபாபா நிறுவனத்தின் மீது விசாரணை தொடங்கிய நிலையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஜாக் மா குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை

  • Share this:
சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா அந்நாட்டு அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக் மாவும் சீன அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட காரணம் என்ன?, கடந்த சில மாதங்களாக ஜாக் மா பொதுவெளியில் தென்படாதது ஏன்?, சீன அரசால் வீட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டாரா?, அலிபாபா நிறுவனத்தின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விகளுக்கான பதிலை உலகம் உன்னிப்பாக தேடி வருகிறது. இந்த கேள்விகள் எழுவதற்கு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களாக சீன அரசு, அலிபாபா நிறுவனத்துக்கு கடுமையாக கெடுபிடிகளை விதித்து வருகிறது. உலகளவில் மிகப்பெரிய வங்கி கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டிருந்த அலிபாபா, அதற்காக தன்னுடைய அன்ட் (ANT) நிறுவனம் மூலம் மிகப்பெரிய அளவில் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்.

இதற்கு தடை விதித்த சீன அரசு, பத்திரிக்கை மற்றும் மீடியாக்களில் செய்துள்ள முதலீடுகளை விற்பனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, சைனா மார்னிங் போஸ்ட் மற்றும் சீன டிவிட்டர் தளமாக கருதப்படும் வெய்போ (Weibo Corp) நிறுவனத்தில் செய்த முதலீடுகளை திரும்பப்பெற நிர்பந்தித்துள்ளது.

ஜாக் மா டார்கெட் செய்யப்படுவது ஏன்?

சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருக்கும் ஜாக் மா, அந்நாட்டில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். ஆன்லைன் வர்த்தகத்தில் மட்டும் ஈடுபட்டு வந்த அவர் அண்மைக்காலமாக பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களிலும் கால்பதிக்கத் தொடங்கினார். அவருடைய புகழ் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்வதை சீன அரசு விரும்பவில்லை. கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்துள்ளதாக கூறிக்கொள்ளும் அலிபாபா நிறுவனம், மக்களின் டேட்டாக்களையும் கைவசம் கொண்டுள்ளது. திடீரென தொலைக்காட்சி, திரைப்படங்கள் மற்றும் சமூகவலைதளம் உள்ளிட்ட மீடியாக்களில் ஜாக் மா கவனம் செலுத்தியது சீனா அரசுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மோதல் எங்கு தொடங்குகிறது?

முன்பே கூறியதுபோல, அலிபே நிறுவனத்தின் மூலம் உலகளவில் மிகப்பெரிய வங்கிக் கட்டமைப்பு உருவாக்க திட்டமிட்ட அலிபாபா, அதற்கான முன்னெடுப்புகளை ஆன்ட் நிறுவனம் மூலம் செயல்வடிவம் கொடுக்க தொடங்கினார். அதற்கான பங்குகள் சுமார் 2 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடந்த ஆண்டு வெளியாவதாக இருந்த நிலையில், அதற்கு சீன அரசு முட்டுக்கட்டை போட்டது. இதனால், கடுப்பான ஜாக் மா, சீன அரசின் வங்கி முறையை கடுமையாக சாடினார். அந்நாட்டில் உள்ள வங்கிகள் அடகுகடைகள் போல செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

தொழில்நிறுவனங்கள் மீதான சீன அரசின் அணுகுமுறை குறித்தும் விமர்சனம் செய்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க காத்திருந்த அரசுக்கு, இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டது. அதாவது, நவம்பர் மாதம் அரசு மீது ஜாக் மா குற்றம்சாட்டிய நிலையில், டிசம்பர் மாதம் அலிபாபா நிறுவனத்தின் விதிமுறை மீறல்கள் குறித்து விசாரணை தொடங்கியது. இதனால் ஜாக் மாவின் சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலரும், அலிபாபா நிறுவனத்தின் மதிப்பு சுமார் 30 பில்லியன் டாலரும் சரிந்தது.

சிறைபிடிக்கப்பட்டாரா ஜாக் மா?

அலிபாபா நிறுவனத்தின் மீது விசாரணை தொடங்கிய நிலையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஜாக் மா குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக தகவல் பரவியது. அதனை உறுதி செய்யும் விதமாக தொழில் முனைவோர்களை தேர்தெடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக கலந்து கொண்ட ஜாக் மா திடீரென அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவரின் நிலை குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. இருப்பினும், அவர் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா? என்ற தகவல் முழுமையாக வெளியாகவில்லை.

யார் இந்த ஜாக் மா?

1964 ஆம் ஆண்டு ஹாங்சோகு நகரில் பிறந்த ஜாக் மா, முதலில் ஆங்கில ஆசிரியாக பணியாற்றினார். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருபவராகவும், வழிகாட்டுபவராகவும் பணிபுரிந்துள்ளார். 1999ம் ஆண்டு மனைவி மற்றும் நண்பர்களுடன் இணைந்து அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார். அப்போது, அவருடைய நிறுவனத்தில் பணியாற்றியவர்களின் எண்ணிக்கை 17. அவரின் திறமையான நிர்வாகத்தால் அசுர வளர்ச்சியடைந்த அலிபாபா நிறுவனம், தற்போது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: