மீண்டும் பறக்க துவங்கிய போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்.! எதனால் தடை நீங்கியது.?

மீண்டும் பறக்க துவங்கிய போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்.! எதனால் தடை நீங்கியது.?

கடந்த நவம்பர் 2020 இல், போயிங் 737 மேக்ஸ் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) நீக்கியது.

 • Share this:
  பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் (Boeing 737 Max aircraft) தொடர்ச்சியாக விபத்துகளில் சிக்கியது. ஆபத்தான விபத்துக்களில் அடுத்தடுத்து சிக்கியதால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போயிங் விமானங்கள் மீண்டும் வானில் பறக்க தயாராகி வருகின்றன. விமானம் பறக்க பாதுகாப்பானது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து அனுமதி கிடைத்த பின், குறைந்தது 18 விமான நிறுவனங்கள் வணிக விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்க நாட்டின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 ரக விமானத்தை முதன் முதலாக கடந்த 1967-ம் ஆண்டு சேவைக்கு விட்டது. இந்நிலையில் இந்த விமானத்திற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது தற்போது தடை நீக்கியுள்ளதன் காரணம் பற்றி பார்க்கலாம்.

  தடை ஏன்.?

  கடந்த அக்டோபர் 2018-ல் போயிங் 737 மேக்ஸ் விமானம் ஒன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து 189 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்விபத்து நேரிட்டதாகவும், விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2019-ம்- ஆண்டு மார்ச் மாதம் மற்றொரு போயிங் 737 மேக்ஸ் விமானம் எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளானது. இதிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இந்த இரண்டு பெரிய விபத்துகளையும் சேர்த்து சுமார் 350 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது பெரிய விபத்தைத் தொடர்ந்து, உலகளவில் போயிங் 737 மேக்ஸ் விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடத்தவும், அதுவரை இந்த ரக விமானம் பறப்பதை நிறுத்தி வைக்கவும் அமெரிக்கா முடிவு செய்தது. இந்த நேரத்தில், யுனைடெட், அமெரிக்கன், சவுத்வெஸ்ட், ஏர் கனடா போன்ற பெரிய விமான நிறுவனங்கள் கூடுதலாக இந்திய கேரியர் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல 737 மேக்ஸ் விமானங்களை தங்களது சேவைகளின் கீழ் இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

  விசாரணையில் என்ன தெரிந்தது.?

  வணிக விமானங்கள் பெரும்பாலும் ஒரு மணி நேரத்திற்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் கூட லிப்ட் வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறகுகளின் சிறப்பு வடிவத்தால் லிப்ட் ஏற்படுகிறது. சிறகு காற்றை கீழ்நோக்கி திசைதிருப்பி அதன் சொந்த லிப்டை மேல்நோக்கி உருவாக்குகிறது. விமான இறக்கையின் மேற்பரப்பில் பின்புறம் காற்று பாயும் வரை இது நன்றாக வேலை செய்கிறது. பின்புற இறக்கைப் பகுதியில், ஒரு பெரிய காற்று அளவு உருவாக்கப்படுகிறது, இதனால் எதிர்மறை அழுத்தம் ஏற்படுகிறது, இது கிட்டத்தட்ட இறக்கையை மேல்நோக்கி இழுக்கிறது.

  இதனிடையே விசாரணையின் போது, பெரும்பாலான நவீன ஜெட்லைனர்களில் வடிவமைப்பு குறைபாடுதான் விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. லேட்டஸ்ட் போயிங் 737 மாடலில் manoeuvring characteristics augmentation system பொருத்தப்பட்டிருந்தது. பறக்கும் போது காற்றின் உயர் கோண தாக்குதலை உணரும்போது, விமானத்தின் மூக்கு பகுதியை கீழ் நோக்கி தள்ளுவது இதன் வேலை. ஏனெனில் விமானத்தின் மூக்கு பகுதி மேல்நோக்கி உயர்வது விபத்திற்கு வழிவகுக்கும். இதுபோன்ற நிகழ்வைத் தடுக்க தான் MCAS வடிவமைக்கப்பட்டது. ஆனால் காற்றின் தாக்குதல் மற்றும் வேகத்தின் கோணத்தில் MCAS-ன் சென்சார்கள் தவறான தரவை வழங்கும்போது, விமானிகள் அல்லது கணினிகள் தவறான முடிவுகளை எடுக்கின்றன. இந்த தொழிநுட்பத்தில் ஏற்பட்ட குறைபாடு மேற்கண்ட விபத்துகளுக்கு காரணமாக இருந்துள்ளது.

  தடையை நீக்க வழிவகுத்தது எது?

  விசாரணை முடிவில் அனைத்து குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியவுடன், போயிங் மூலம் MCAS ஐ சரிசெய்தல் மற்றும் MCAS பற்றி விமானிகளுக்கு பயிற்சி அளிக்க சிமுலேட்டர்கள் மற்றும் பயிற்சி மையங்களை அமைத்தல் உள்ளிட்ட திருத்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து நம்பிக்கை ஏற்பட்டவுடன் கடந்த நவம்பர் 2020 இல், போயிங் 737 மேக்ஸ் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) நீக்கியது. தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் கூடுதல் பைலட் பயிற்சியைத் தொடர்ந்து ஜப்பான், ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா, பிரேசில், அமீரகம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் போயிங் விமானத்தை திரும்பவும் இயக்க ஒப்புதல் அளித்தன. எனினும் போயிங் 737 மேக்ஸ் விமானத்தை தடை செய்த முதல் நாடான சீனா, இந்த ரக விமானத்தை மீண்டும் இயக்க இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தியாவிலும் இந்த விமானத்தை மீண்டும் இயக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

   
  Published by:Vijay R
  First published: