அரசியல் மற்றும் பொருளதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது பாகிஸ்தான். மக்களின் அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது பாகிஸ்தான் அரசு. அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடியால் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டை திவால் ஆகவிடாமல் தடுப்பதற்காக சீனா மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை உதவி செய்தாலும் அந்நாட்டின் மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய பாகிஸ்தான அரசால் முடியவில்லை.
கடுமையான பொருளாதார நெருக்கடியால சிகேடி எனப்படும் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதிலும், இரும்பு, எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் இறக்குமதிகளிலும் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது பாகிஸ்தான் அரசாங்கம். மேலும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகளில் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானில் பல்வேறு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளது. அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றுதான் ஹோண்டா. இந்த நிலையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹோண்டா நிறுவனம் திடீரென தனது ஆலையை தற்காலிகமாக மூட இருப்பதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்டா நிறுவனம் கார் அசெம்பளி ஆலையை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாகவும் இதனை அடுத்து மார்ச் 9 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக பாகிஸ்தானில் உள்ள ஹோண்டா அட்லஸ் கார் நிறுவனம் மூடப்படும் என்று ஹோண்டா நிறுவனம் அந்நாட்டு ஸ்டாக் எக்சேஞ்ச் நிறுவனத்திற்கு ஹோண்டா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும் பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை இதே போன்று நீடித்தால் நிரந்தரமாக மூடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுசுகி மோட்டார் கம்பெனி மற்றும் டொயோட்டாவின் மோட்டார் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஆலையை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது ஹோண்டா நிறுவனமும் மூடவுள்ளதாக தெரிவித்ததையடுத்து உற்பத்தி குறைவு மட்டும் இன்றி அந்நாட்டின் வேலை வாய்ப்பின்மையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து, பொருளாதார நெருக்கடியை சீர் செய்யாவிட்டால் அந்நாட்டு தொழில்துறை முற்றிலும் முடங்கி பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடையும் என்று சர்வதேச பொருளியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பொருளாதார நிலைமை பாகிஸ்தானில் எப்போது சீராகும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.